வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும், நான் என் அனுபவங்களை எழுதுகிறேன் எனச் சொல்லும் என். கே ரகுநாதன் அவர்களின் நிலவில் பேசுவோம், நெருப்பு, குடை போன்ற பல கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கினறன.  இவரின் தசமங்களம் என்ற சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. இவரை ஞாயிறு தினக்குரல்  வாசகர்களுக்காக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

  1. உங்களின் இலக்கியப் பயணம் எப்படி  ஆரம்பமானது?

சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாக வாசிக்கும் பழக்கம் இருந்தது. எங்கள் ஊரவரான யாழ்ப்பாணக் கவிராயர் எனப்படும் கவிஞர் பசுபதிக்கும் எனக்கும் இடையில் நல்லதொரு நட்பும் இருந்தது. இவையும் நான் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் உடன் பிரசுரம் செய்த சுதந்திரன் பத்திரிகையின்  ஆசிரியர் அ.ந. கந்தசாமியும் என் இலக்கியப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தனர் எனலாம்.  அதை விட 1951 ம் ஆண்டு எனது 20 வயதில் எழிலன் என்ற புனைபெயரில் நான் எழுதிய முந்திவிட்டாள் என்ற கதை இந்தியாவில் அந்த நேரம் வெளிவந்த பொன்னி என்ற சஞ்சிகையில் அட்டைப் படத்துடன் பிரசுரமாகி மிகுந்த ஊக்கம் தந்தது.

  1. நிலவில் பேசுவோம் என்ற சிறுகதை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமாகப் புரையோடிப் போயிருந்த சாதிப்பிரச்சனையைச் சொல்வதால் அது உங்களுடைய சொந்தக் கதையாக இருக்கலாம் என பல ஊகங்கள் இருந்திருந்திருக்கும். அப்படி ஏதாவது சர்ச்சை நிகழ்ந்ததா?

 இல்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அது பற்றிய ஒரு குறிப்புச் சொல்ல விரும்புகிறேன். நிலவில் பேசுவோம் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளில் எந்த விதமான நல்ல கருவும் இல்லை என்று  சாகித்தியமண்டல பரிசுக்காக அனுப்பப்பட்ட போது அது  நிராகரிக்கப் பட்டது. அதாவது சாதிப் பிரச்சனை ஒரு நல்ல கருவாக அவர்களுக்குத் தெரியவில்லை.

  1. உங்களுடைய முதல் கதைத்தொகுதி நிலவில் பேசுவோம் வெளிவந்து 34 வருடங்களின் பின்பே தசமங்கலம் வந்திருக்கிறது.  இதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளதா?

ஆமாம், 1962 ல் நிலவில் பேசுவோம் வந்த பின் 1996 ல் தான் தசமங்களம் வந்தது. நான் எழுதுவது வெகு குறைவு. புகழுக்கும் ஆசைப்படுவது கிடையாது. அதனால் கதைகள் சேரும் வரை காத்திருந்தேன்.

  1. கந்தன் கருணை பிரபல்யமான அளவுக்கு அதை எழுதியவர் நீங்கள் என்பது தெரிந்திருக்கவில்லை என்பதன் காரணம் என்ன? அந்த நாடகத்தினைப் பற்றிச் சற்றுச் சொல்லுங்களேன்.

தீண்டத்தகாதோர் என தள்ளிவைக்கப் பட்ட மக்கள்   மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் போவதற்காக மேற்கொண்ட போராட்டம் பற்றிய கதை தான் கந்தன் கருணை.  அன்று கோவிலுக்குள் புக  முயன்ற எங்களை சுந்தரலிங்கம் எம்.பி தடுத்த போது  எனக்கு ஏற்பட்ட மன  உணர்வுகளையும் பாதிப்புக்களையும் மற்றவர்களின் கொதிப்பையும் கந்தன் கருணை என்ற நாடகத்தில் பதிந்துள்ளேன்.  நான் ஒரு விளம்பரப் பிரியன் அல்லன். அதனால் கந்தன் கருணையின் ஆசிரியன் நான் தான் என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை. பேராசிரியர் மெளனகுரு, குழந்தை சண்முகலிங்கன் போன்றோர் அம்பலத்தாடிகள்  என்று ஒரு நாடகக் குழுவை நடாத்தி வந்தார்கள். அவர்கள் தான் அதை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பல தடவைகள் நாடகமாக அரங்கேற்றினார்கள். யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் கற்பித்தவரும் பிரபல நாடக்க் கலைஞருமான தாசியஸ் கூட கந்தன் கருணை நாடகம் வெளிவந்து 25 வருடங்களின் பின் கந்தன் கருணை பார்த்திருக்கிறீர்களா? நல்லதொரு நாடகம் அது என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்.

  1. ஈழத்தின் இன்றைய இலக்கிய வளர்ச்சியின் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  அதனுடன் ஒப்பிடும் போது கனடாவில் தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன?

எங்குமே இப்போது அதீத கற்பனை காணப்படுகிறதே தவிர நடைமுறைப் பிரச்சனைகள் அதிகம் காட்டப்படுவதில்லை என நினைக்கிறேன்.

  1. இங்குள்ள புகலிடப் பிரச்சனைகள், தலைமுறை இடைவெளிப் பாதிப்புக்கள் பற்றி எழுத வேண்டும் என்ற தூண்டல் வந்ததுண்டா? இப்போதும் எழுதுகிறீர்களா?

வெளியில் அதிகம் செல்வதில்லை. கொழும்பில் இருந்த போது எழுத்தாளர்களைச் சந்தித்து கதைக்க அதிகம் வசதியிருந்தது. அங்கு இருந்தது போல் அதிக எழுத்தாளர்களோ, இலக்கியச் சந்திப்புக்களோ இங்கு இல்லை.  ஆதலால் எழுத அதிகம் நாட்டம் வருவதில்லை. ஆனால் அண்மையில் நான் பிறந்த கிராமமான வராத்துப்பளை பற்றி  ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். இந்தியாவில் வாழும் என் நண்பன் செ. கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு பூபாலசிங்கம் புத்தகசாலையினூடாக விரைவில் வெளிவரவுள்ளது.

  1. விமர்சகர் ஒரு வழிகாட்டி என்று கருதிய நீங்கள் இன்றைய காலத்தில் விமர்சனம் வெறும் பாராட்டுரையாக மாறியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 விமர்சனம் உண்மையான நிலைப்பாட்டைக் காவேண்டும். தெரிந்ததவர் நண்பர் என்பதற்காக அது மாறுவது விமர்சனம் அல்ல,

  1. 1956 ல் நீங்கள் எழுதிய நானும் நீங்களும் என்ற தமிழ் சிங்கள உறவைக் காட்டும் கதை இன்றைய நிலைமைக்கும் பொருந்தக் கூடிய ஒரு நல்ல யதார்த்தமான கதை. இப்படியான கதைகள் எழுதுவதற்கு  அந்த  நேரத்தில் இருந்த தமிழ், சிங்கள எழுத்தாளர்கள்  அதிக  முக்கியத்துவம் கொடுத்திருந்தால் ஒரளவுக்கு தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் இருக்கும் கசப்புணர்வு இப்படி வளராமல் தடுத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன், அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். ஆனால் முற்போக்கு எழுத்தாளர்கள் கூட உண்மையை உள்வாங்கி எழுதுவது மிகவும் குறைவாகவே உள்ளது.

  1. நடைமுறைப் பிரச்சனைகள் பற்றிய உங்களுடைய எழுத்து மற்றவர்களில் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றி அல்லது எழுத்தினால் ஏற்பட்ட ஏதாவது மறக்க முடியாத சம்பவம் பற்றிச் சொல்லமுடியுமா?

அப்படிப் பெரிதாக எதுவும் சொல்லமுடியாது. கவிஞர் முருகையனின் தம்பி சிவானந்தன் சாதிப்பிரச்சனை பற்றிச் சொல்லும் எனது நிலவில் பேசுவோம் என்ற கதைக்கு வெளியே நல்ல நிலவு எனப் பெயரிடச் சொன்னார். அதாவது வெளியில் தம்மை நல்லவர்களாகக் காட்டுவோர் சிலரின் உள் மனங்கள் எப்போதுமே இருட்டாகவே இருக்கிறது.  எங்களுடைய அம்மாவின் காலத்தில் வேளாளர் தங்கள் வீடுகளில் வேலை செய்ய வரும் தாழ்ந்த சாதிப் பெண்களின் காலடிகள் கூட தங்கள் வளவுகளில் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். அதனால் வேலைக்குப் போகும் பெண்கள் தம்மைச் சுற்றிப் பனை ஒலைகளைக் கட்டிக் கொண்டு நடக்கும் படி பணிக்கப்பட்டனர்.  அந்தப் பெண்கள் முன் போக ஒலை அவர்களின் காலடையாளத்தை அழித்துச் சென்ற காலம் அது. அப்படிப் பார்க்கும் போது இப்போது கொஞ்சம் சாதிப்பிரச்சனை குறைந்துள்ளது எனலாம்.

  1. ஆமாம், முன்பு இருந்தளவுக்கு சாதிப்பிரச்சனை இப்ப இல்லைத் தான். இருந்தாலும் கனடாவில் கூட திருமணம் என்று வரும் போது அது தலை  தூக்கத்தான் செய்கிறது.இல்லையா? நிறைவாக மூத்த எழுத்தாளர், முத்திரை பதித்த படைப்புக்களைப் படைத்தவர் என்ற வகையில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

நிஜ அவலங்களை, ஆழமான பார்வையுடன் எழுதுங்கள். புகழுக்காக, போலித்தனமாக எழுதாதீர்கள்.

 Image