இனி …

மழை இன்னும் விட்டபாடில்லை.

காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று கொட்டும் மழையில் தெப்பமாக நனைந்தபடி, ஆதியும் அவனும் வெகு மகிழ்வாக ஆடிக்கொண்டிருந்தனர்.

“ஏ, உங்களுக்குக் கொஞ்சமெண்டாலும் அறிவிருக்கே? பிள்ளையை மழைக்கே வைச்சுக்கொண்டு ஆடுறியள், அவனுக்குக் காய்ச்சல் வரப்போகுது.”

ஆங்கில வகுப்பு முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த கலா நெருமியபடி, ஆதியைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஆதியின் அலறல் உச்சஸ்தாயில் ஒலித்தது.

“சீ, பிள்ளைக்குப் போடுறதுக்கு ஓடிக்கொலோன்கூட இல்லை! போய்க் கெதியா ஒண்டு வாங்கிக்கொண்டு வாங்கோ பாப்பம்!”

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவனிடம், மாற்றுடைகளைக் கைகளில் திணித்தபடி இரைந்தாள்.

அவன் எதுவும் பேசாமல் மீளவும் வெளியேறினான். அவன் உடை மாற்றியபோது சொட்டிய ஈரத்தைப் புறுபுறுத்தபடி அவள் துடைக்கும் சத்தம் அவன் காதுகளை அடைத்தது.

கீரை சமைக்கும்போதோ அல்லது பலாப்பழம் போன்ற பழங்களை வெட்டும்போதோ, ஊரிலை எண்டால் இதுகளை ஆடு, மாடுகளுக்குப் போடலாம், இங்கை எல்லாம் வீணாய்ப்போகுது, என அலுத்துக் கொள்வாள். ஒரு தும்புத்தடிக்கு இவ்வளவு காசா, இதிலை எத்தினை பேர் அங்கை சாப்பிடலாமென மனம் குமுறுவாள். நாட்டைவிட்டு வந்த கவலை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு வளர்ந்ததன் ஆயாசமும்தான் இதென அவன் அவற்றை விளங்கிக்கொண்டான். அதிலிருக்கும் நியாயத்தையும் உணர்ந்துகொண்டான். அப்படியே அவள் கேட்ட ஓடிக்கொலோனை வாங்கிக்கொடுப்பதிலும் அவனுக்குப் பிரச்சினையிருக்கவில்லை. ஆனால் அகம்பாவத்துடன் அதைச் சொன்னதுதான் அவனின் மனதை இடைஞ்சல்படுத்தியது. திரும்பத்திரும்ப அவள் தன்னை மரியாதையில்லாமல் நடத்துறாள் என்பதில் அவனுக்குக் கவலையாகவும் அதை மேவிய ஆத்திரமாகவும் இருந்தது.

சொப்பேர்ஸ் றக் மார்ட்டில் அவள் சொன்ன ஓடிக்கொலோன் இருக்கவில்லை. அவன் வெறுங்கையுடன் திரும்பினான்.

“அங்கை இல்லையெண்டால் இன்னொரு இடத்துக்குப் போயிருக்கலாம்தானே!” எரிந்துவிழுந்தாள் அவள்.

“நல்ல வடிவாய் துடைச்சுப் போட்டுக் கெயர் டையரைப் பிடிச்சால் காய்ஞ்சிடும்தானே! வேணுமெண்டால் கொஞ்சம் சென்ரும் போடும், ஓடிக்கொலோன் செய்யிற வேலையை …” அவன் சொல்லிமுடிப்பதற்கு முன் அவள் மீளவும் சன்னதமாடினாள்.

அவன் ரீவியை ஓன் பண்ணிவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.

“நான் சொல்ற எதைத்தான் நீங்க செய்யிறியள்? ஒரு குழந்தைப் பிள்ளையெண்டும் பாக்காமல் உங்கடை சந்தோஷத்துக்காண்டி நீங்க போடுற …”

அவனுக்கு மிகுந்த கோபமும் எரிச்சலும் வந்தது. “வாய்க்கு வந்தபடி கதைச்சீரெண்டால் …” சுட்டுவிரலை ஆட்டியபடி அவளுக்கருகில் போனான்.

“எங்கை அடி பாப்பம்! ஒரு மிருகத்திட்டையிருந்து தப்பி இன்னொண்டிட்டை வந்திருக்கிறன்” அவள் பெரிதாய்க் கத்தினாள்.ADVERTISEMENTREPORT THIS AD

“போடி”, என கையால் சைகைசெய்தபடி ரீவிக்கு முன்னால் நின்றவளைத் தள்ளிப்போட்டு, அவளின் கையிலிருந்த ரெமோட்டை அவன் பறிக்கமுயன்றான்.

அப்படிப் பறிக்க முயன்றபோது அந்த ரெமோட் பின்பக்கமாக இழுபட்டு அவளின் உதட்டைக் காயப்படுத்தியது.

“அசல் மிருகம். உங்களையெல்லாம் உள்ளுக்கை போடோணும்!”

“என்ரை நிம்மதியைக் கெடுக்கிறதுக்காண்டித்தானேடி வந்திருக்கிறாய்! தாராளமாகச் செய், ஏன் பாத்துக்கொண்டு நிக்கிறாய்? …” அவன் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள்.

மிரண்டுபோன ஆதி மீளவும் அலற ஆரம்பித்தான். அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

சிறிது நேரத்தில் அவளைத் தாக்கிய குற்றத்துக்காக அவனைக் கைதுசெய்வதாக வீட்டில் பொலிஸ் வந்துநின்றது.

மூன்று மாதங்களின் பின் மேற்பார்வை செய்யப்படும் சந்திப்பு ஒன்றில் ஆதியைச் சந்திப்பதற்காக அவன் இன்று வந்திருக்கிறான். எதிர்பாராமல் வந்து கொட்டிய மழை அவனைச் சுணங்கச் செய்திருந்ததுடன் கொஞ்சம் நனைத்துமிருந்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவன் பிடித்திருந்த குடை அங்குமிங்கும் ஆடியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது நான்கு மணி எனச் சொல்லி ஓய்ந்தது.

வேகமாக நடந்துசென்ற அவன் அந்தக் கட்டிடத்தின் அழைப்பு மணியை அவசரமாக அழுத்தினான். ஆதியுடனான ஒரு நிமிடம்கூட வீணாகிவிடக்கூடாதே என அவனின் மனம் பதகளித்தது.

அவனின் அழைப்புக்குப் பதிலளித்த பெண்ணிடம் தன் பெயரைச் சொன்னான். ஆதியை அழைத்து வருவதாகவும் உள்ளே வந்து குறித்ததொரு அறையில் காவலிருக்கும்படியும் கூறி அவள் அப்பால் சென்றாள்.

அவள் போட்டிருந்த குதிக்கால் உயர்ந்த செருப்பு தரையில் ஒலிப்பிய ஒலியைத் தவிர எந்தச் சத்தமும் அந்த இடத்தில் கேட்கவில்லை. காத்திருந்த அந்தக் கணங்கள் அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன.

அந்த அறையில் வேறு சில ஆண்களும் அவனுடன் இருந்தனர். அவர்களின் கண்களிலும் கலக்கம் தெரிவதுபோல அவனுக்குத் தோன்றியது. ஒருவர் அவரது சாவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர் கையில்வைத்திருந்த விளையாட்டுக் காரை வருடிக்கொடுத்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் போனில் மும்மரமாக இருந்தார். வேறொருவர் குறுக்கும்மறுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

பத்து நிமிடங்களின் பின் திரும்பி வந்த அந்தப் பெண், ஆதி வரமாட்டேன் என அழுவதாகவும் அவன் ஆதியை இன்று பார்க்கமுடியாதென்றும் கூறி, ‘சொறி’ சொன்னாள். மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் ஆதியைப் பார்க்கவந்திருந்த அவனுக்கு அந்தப் பதில் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றவனிடம், அடுத்தமுறை பிள்ளையைத் தயார்படுத்திக்கொண்டு வரும்படி அம்மாட்டைச் சொல்லியிருக்கிறம். திரும்பவும் வாற ஞாயிறு இதே நேரம் வாங்கோ என ஆங்கிலத்தில் சொன்னவள் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து அகன்றாள்.

“மூண்டு மாதமாச் சந்தியாமலிருந்தவனை நேரில காட்டாமல் சும்மா வா எண்டு கூப்பிட்டால், ரண்டு வயதும் நிரம்பாத அந்தக் குழந்தை என்னெண்டு வருவான்?” தனக்குத் தானே சொன்னவன் காருக்குள் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான்.

எந்தப் பயனுமற்ற அந்த ஐம்பது நிமிடப் பிரயாணத்தை மீளவும் வீட்டை நோக்கிச் செய்யவேண்டுமே என்ற எண்ணம் அவனுக்குள் மிகுந்த அலுப்பை உருவாக்கியது. பக்கத்திலிருந்த ‘பார்’க்குள் காரைத் திருப்பினான்.

கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. வந்த கடன் அடைத்து, தங்கைச்சிக்கும் திருமணம் செய்துகொடுத்தபின் ஆயாசமாக மூச்செடுத்த காலம் அது.

“முப்பது தாண்டியிட்டுது, வயசானாப்போலை பிள்ளைப் பெத்தால் பிறகு பிள்ளையளோடை ஓடிவிளையாடுறதுக்கு உடலிலை தெம்பிராது தம்பி,” அம்மா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தா.

அந்த வருடக் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது, அவளின் படத்தைக் காட்டி, “இந்தப் பொம்பிளைப் பிள்ளையை எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்குத் தம்பி. வன்னியிலை நடந்த பிரச்சினைக்கே அம்பிட்டு தாய் செத்துப்போச்சாம். பெரிய பாவம். பதினாறு வயசிலிருந்தே வீட்டுப் பொறுப்பெல்லாம் அதுதான் பாக்குதாமெண்டு புரோக்கர் சொன்னார். … பிள்ளை நல்ல வடிவெல்லே!” மறுப்புச் சொல்லமுடியாத வகையில் கலியாணத்துக்கு அச்சாரமிட்டா அம்மா.

“அம்மா, இப்ப யார் பாவமெண்டு உங்களைக் கேட்கோணும் … ஆனா அதுக்குத்தான் நீங்க உசிரோடை இல்லையே!” குடி தலைக்கேற மனசு மறுகியது.

X X X

ஆதியைப் பார்க்கவென அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வெளிக்கிட்டபோது, ஆதிக்கு பிடித்த சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளையும், சொக்களேற் மில்க்கையும் மறக்காமல் வாங்கிக்கொண்டான். இந்த முறை அவனைப் பார்க்கக் கிடைக்கவேண்டுமென உலகத்திலுள்ள தெய்வங்களை எல்லாம் நினைத்து அவனின் மனம் மன்றாடியது. அடுக்கடுக்காகப் பலவகையான நேர்த்திகளையும் அந்தந்தத் தெய்வங்களுக்கு நெக்குருகச் சொல்லிக்கொண்டான்.

இருபது நிமிடம் முன்பாகவே அங்கே போய்விட்டான். காத்திருப்பு அறையில் அவன் உட்கார்ந்திருந்தபோது அவனின் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. முடிவில் அழுதபடி திமிறிக்கொண்டிருந்த ஆதியுடன் அவர்களை மேற்பார்வை செய்யவென நியமிக்கப்பட்டிருந்த பெண்ணான திரேசா வந்தாள்.

வந்தவழியால் மீளவும் ஓடிச்செல்ல முயன்ற ஆதியை அங்கு நிறுத்துவதற்கு திரேசா மிகப் பெரிய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. அவனருகே ஆதியைக் கொண்டுவருவதற்கு அந்தச் சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளிடமோ அல்லது சொக்களேற் மில்க்கிடமோ எந்தவிதமான மந்திரசக்தியும் இருக்கவில்லை. அங்கிருந்த வெவ்வேறு வகையான விளையாட்டுப் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் ஆதிக்கு விளையாட்டுக்காட்டினான். இருந்தும், அவனுக்குக் கிட்ட வரமாட்டேன் என ஆதி அடம்பிடித்தான்.

திரேசா அவர்களை நோட்டமிட்டபடி அவளின் கொப்பியில் ஏதோ எழுதிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு மிகச் சிரமமாக இருந்தது. கண்காணிக்கப்படாதிருந்தால், பலவந்தமாகக் கட்டியணைத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ முயன்றுபார்க்கலாம். இப்ப அவன் ஒன்றைச் செய்யப்போக அது தவறென்று திரேசா நினைத்தால் என்னவாகுமோ என அவனுக்குப் பயமாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆதியுடன் அவன் கதைக்கும் ஒவ்வொரு சொல்லையும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர் திரேசாவுக்கு மொழிபெயர்த்தபடி இருந்தார்.

அருகில் வேறு சில சிறுவர்கள் கார் ஓடியும், பந்தடித்தும் வெவ்வேறு விளையாட்டுக்களை அவர்களின் தந்தையருடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இப்படியே இருபது நிமிடங்கள் கடந்தன. ஆதி அழுதுகொண்டே இருப்பதால் அடுத்த ஞாயிறு மீளவும் முயற்சிக்கும்படி முடிவாகத் திரேசா சொன்னாள். ஆதிக்கென வாங்கிவந்தவற்றை கலாவிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட அவன் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறினான். ஆதியைக் கண்டது, அவனது ஆதங்கத்தை மேலும் கூட்டியிருந்தது. ஆசைதீர ஆதியைக் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ முடியாததால் அவனின் மனம் முழுவதும் வெறுமை படந்திருந்தது.

வேலையால் வீட்டுக்குச் செல்லும்போது ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்ளும் ஆதி இப்படி மாறிப்போனான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனுடைய கதிரையில் எவரும் இருக்கவிடாமல், “அப்பா, அப்பா” என அது அப்பாவுடையது என மழலை பேசும் ஆதி, அவனது மார்பில் படுத்திருப்பதில் சுகம் காணும் ஆதி … அந்த ஆதியா இது, அவனுக்கு நெஞ்சடைத்தது.

ஆதி ஸ்ரோபெரியை விரும்பிச்சாப்பிட்டானா, என அவன் தங்கியிருந்த வீட்டுக்காரப் பெண் ஆர்வத்துடன் கேட்டபோது, அவனால் பதில் சொல்லமுடியவில்லை.

X X X

அடுத்த வாரம், ஆதியிடம் இருக்கும் அதே போன்ற தீயணைக்கும் வண்டி ஒன்றை வாங்கினான். அது ஓடும்போது உருவாக்கும் ஒலியும் ஒளியும் ஆதியின் கண்களை விரியச்செய்வதுண்டு. அத்துடன் ஆதிக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றையும் வாங்கிக்கொண்டான். அதிலுள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக அழுத்தும்போது அவை வெளியே எட்டிப்பார்த்து அவற்றுக்குரிய சத்தங்களை எழுப்புவதைப் பார்த்து ஆதி பிரமித்துப் போவது அவன் கண்களில் ஓடி மறைந்தது.

அன்று, ஆதி அவன் தீபாவளிக்கு வாங்கிக்கொடுத்திருந்த சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தான். அதன் முன்பக்கத்தில் இருந்த அந்தப் பெரியக் கறுப்பு நிறப் பூனைக்குட்டியின் படம் ஆதியை மிகவும் கவர்ந்திருந்தால் அதை ஆதி விரும்பிப் போடுவது வழக்கம்.

“ஹாய் ஆதிக் குட்டி, ரொசி சுகமா இருக்கா?”

அந்தப் பூனைக்குட்டியை வருடியபடி கேட்டவன், மியாயா மியாயா என மெலிதாய் ஒலி எழுப்பினான். ஆதியின் முகத்தில் சிறியதொரு புன்முறுவல் ஏற்பட்டது.

பின் அந்தப் புத்தகத்தை விரித்து அதிலிருந்த பூனையின் படத்தை அவன் அழுத்தியதுபோது, மெல்ல மெல்ல நகர்ந்து ஆதி அவனருகில் வந்தான். பின் பூனையை ஆதியே அழுத்தினான். அப்படி ஒன்றொன்றாக ஆதி அழுத்த அழுத்த அந்தந்த மிருகங்கள் எழுப்பும் ஒலியை அவனும் சேர்ந்து எழுப்பினான்.

பின்னர், “அப்பா அப்பா,” எனத் தன் மழலை மொழியால் கூறி அவனை அழுத்தும்படி அந்தப் புத்தகத்தை ஆதி சுட்டிக்காட்டியபோது அவனின் உடல் சில்லென்று குளிர்ந்துபோனது. ஆதி கேட்டபடி அவன் அந்தப் பூனையை அழுத்தியபோது ஆதி வந்து அவனின் மடியில் ஏறிக்கொண்டான். அவனுக்குக் கண் கசிந்தது. அவன் ஆதியை இறுகக் கட்டிக் கொண்டான்.

அதன்பின்பான சந்திப்புக்களின்போது ஆதி மீளவும் அவனுடன் நன்கு ஒட்டிக்கொண்டான். அந்த இரண்டு மணி நேரம் முடிந்துபோகும்போது அவனை விட்டுச்செல்ல மாட்டேன் என ஆதி அழ ஆரம்பித்தான். ஆதியை விட்டுப்பிரிவது அவனுக்கும் மிகுந்த கஷ்டமாக இருந்தது.

ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் விடிவுக்காகவும் அவன் காவல் இருந்தான்.

மேற்பார்வையில்லாத சந்திப்பாக மாற்றி தான் வதியும் வீட்டுக்கு ஆதியைக் கூட்டிச்செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென அவனின் வக்கீலுடன் அவன் கலந்தாலோசித்தான்.

X X X

பிணையில் அவன் விடுபட்ட ஓரிரு நாட்களின்பின் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திலிருந்து வரும் வழமையான அந்த அழைப்பு அவனுக்கும் வந்திருந்தது. அந்த உரையாடலின் முடிவில், நடந்ததுக்கு அவள் வருந்துவதாகவும், இப்பிடியெல்லாம் பிரிஞ்சிருக்க வேண்டிவருமெண்டு அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனியவா பிள்ளை வளர்ப்பதை அவளால் கற்பனைசெய்துகூடப் பாக்கமுடியாமலிருக்கிறது என்றும், மீண்டும் சேர்ந்துவாழ அவள் விரும்புவதாகவும் கலா சொன்னதாகக் கூறிய அந்தப் பணியாளர், அவனுடைய திட்டம் என்னவென்று அவனிடம் கேட்டிருந்தார்.

இனியும் அவளுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதேநேரத்தில் வாரத்தில் இரண்டு நாளோ, மூன்று நாளோ மட்டும்தான் ஆதி அவனுடன் இருக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அதை எப்படித் தாங்கிக்கொள்வதென்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஆதிக்காகவென அவன் அவளுடன் சேர்ந்து வாழப்போனால், மீண்டும் ஒரு தடவை இப்படி ஒன்று நடந்து – அதற்காக அவள் பொலிசை அழைத்தால், முதல் முறை என்பதால் இப்போது கிடைத்த மன்னிப்பு பிறகு கிடைக்கமாட்டாது என்ற யதார்த்தம் அவனுக்கு மிகுந்த கிலேசத்தைக் கொடுத்தது. மேலும் இப்படி இருவரும் முரண்பட்டிருந்தால் அது ஆதியின் மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதையும் அவன் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் பொலிஸ் காவலில் இருந்ததில் அவனுக்கு மிகுந்த அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால் யோசிக்கவேண்டியிருப்பதாக அந்தப் பணியாளரிடம் அவன் அன்று கூறியிருந்தான்.

ஆனால், இன்னும்தான் அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவனுக்குத் தலை கிறுகிறுத்தது.

நன்றி: பதாகை, காற்றுவெளி, சிறுகதை மஞ்சரி – டிசம்பர் 2020

சர்வதேச ஆண்கள் தினம்

நவம்பர் 19 , சர்வதேச ஆண்கள் தினமாக வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது.

எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம், வேண்டத்தகாத அந்த விடயங்களின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் நல்ல விடயங்களை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், சென்ற வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருந்தது. இவ்வருடக் கருப்பொருளாக ஆண்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் அமைந்திருக்கிறது.

ஆண்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகளையும், அவர்களின் வேலையிடங்களில் நிகழும் இறப்புக்களையும் தடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறியலாம்.  மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆண்களைப் பாதிக்கும் உடல்நல, மன நலப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வாழ்வில் ஆணாதிக்கம் விளைவாக்கும் வெவ்வேறு வகையான தாக்கங்கள்,  இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது சமூகமே என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வுகளும் கிடைக்கும் என்பதே யதார்த்தமாகும்.

அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகரீதியான கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் பொருத்தமானவை எவை என்பது குறித்து, அவரவர் பாலினத்தின் அடிப்படையில் பிள்ளைகள் மேல் வேறுபட்ட எதிர்பார்ப்புகள் சுமத்தப்படுகின்றன. பிறந்தவுடனேயே இளஞ்சிவப்பு நிறம் சிறுமிகளுடனும், நீல நிறம் சிறுவர்களுடனும் தொடர்புபடுத்தப்படுவதில் ஆரம்பிக்கும் பாலியல் வேறுபாடு அதன் அடிப்படை பற்றிய விளக்கமின்றியே பெற்றோர்களால் சமூகமயமாக்கப்படுகிறது.

பின்னர், பிள்ளைகள் வளரும்போது, அவர்களுக்காகத் தெரிந்தெடுக்கப்படும் விளையாட்டுப் பொருள்களும் பெரும்பாலும் அவ்வாறானவையாகவே அமைகின்றன. எதிர்காலத் தாய்மார் வேடங்களுக்குப் பெண்களைத் தயார்படுத்தும் சமூகமயமாக்கல் முயற்சி சிறுமிகளுக்குப் பொம்மைகளைக் கொடுக்கிறது. ஆனால்,  சிறுவர்களுக்கு வாகனங்களும், ஆக்கிரமிப்புப் போக்குகளை வெளிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் (action figures) கொடுக்கப்படுகின்றன.

மனித குலத்தின் ஆரம்பத்தில், உயிர் வாழ்தலுக்கான உணவுக்காக வேட்டையாடுவதற்காகவும், தங்களின் உயிர்களை மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும் ஆக்ரோசமாகச் செயற்பட்ட ஆண்களும், வீட்டுக்குள் இருந்து பிள்ளைகளை வளர்க்கும் கடமையைச் செய்வதற்காக அமைதியாக வாழ்ந்த பெண்களும் அந்தச் சூழல்களால் பெற்றுக்கொண்ட இயல்புகளை இவ்வகையான பிள்ளைவளர்ப்பு மேலும் வளர்த்தெடுக்கிறது.

தைரியமானவர்களாக, வலிகளைத் தாங்கக் கூடியவர்களாக, ஆபத்தை எதிர்கொள்ளக்கூடியவர்களாக, அவர்களின் அன்புக்குரியவரைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டுமென சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இன்னொருவகையில் சொல்வதானால் அப்படி அவர்களை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம். இதனால் வலிகளைப் பற்றியோ அல்லது காயங்களைப் பற்றியோ அதிகம் சிரத்தையெடுக்க அவர்களுக்கு வழியில்லாமல் போகிறது.

ஆண் பிள்ளை அழக்கூடாதென்றும், நீ என்ன பொம்பிளைப் பிள்ளையா அழுவதை நிறுத்து என்றும் மீளவும் மீளவும் நாங்கள் கூறும்போது, உணர்ச்சிகளை மறைப்பதற்கும், வலிகளை மனதின் ஆழத்தில் புதைப்பதற்கும், உதவியை நாடாமல் இருப்பதற்கும் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் (அத்துடன் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணக்கருவையும் இது சிறுவர்களின் மனதில் விதைத்துவிடுகிறது).

மேலும், ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை என்பன ஆணின் இயல்புகள் எனப் புராதானக் கதைகள் ஊடாக அவர்களுக்குக் கற்பிக்கிறோம். குறிப்பாக, வீரச் செயல் என்பது ஆணின் ஒரு சாதனை எனப் போற்றுவதன் மூலம், பயமில்லாதவர்களாக இருக்கவேண்டுமென்ற நியதியுடன் ஆண் பிள்ளைகளை நாங்கள் வளர்க்கிறோம்.

ஊடகங்களும், இந்த வகையான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆண்களின் மனப்பாங்கில் எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்றன.  தசைவளர்ச்சி, வீரியம் என்பன உள்ளவர்களாகவும், விளையாட்டில் சிறந்தவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள் என முன்னுதாரணங்கள் காட்டப்படுகின்றன. அத்துடன், எதிரிகளை வெல்வதற்கு அவர்கள் கொலைசெய்யும் வல்லமையும் பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்ற எண்ணக்கருவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், வீடியோ விளையாட்டுக்களும், திரைப்படங்களும் காட்சிப்படுத்துகின்றன.

இவ்வகையான எதிர்பார்ப்புகள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. சவால்களில் வெல்லமுடியாதபோது அல்லது தோல்வி ஒன்றைத் தழுவும்போது மனவழுத்தம், நித்திரையின்மை போன்ற பல பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக அவர்களுக்கு உருவாகின்றன. இவற்றை மேவுவதற்கு வழிதெரியாத சிறுவர்களும் ஆண்களும், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாகி – போதைப் பொருள் பாவனை, குடிப்பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையாகின்றனர், பின்னர் முடிவில் மனச்சோர்வுக்குள் அமிழ்ந்துபோகின்றனர்.

மேலும், மனம்விட்டுப் பேசப் பழக்கப்படாததால், சிலவேளைகளில் இது தற்கொலையை அவர்களில் விளைவாக்குகிறது. அத்துடன், இதய நோய்கள், சுவாசப்பைப் புற்றுநோய் என்பன ஒப்பீட்டளவில் ஆண்களில் அதிகமாகக் காணப்படுவதுடன், இறப்பும் விரைவில் ஏற்படுவதற்கு இவ்வகையான சமூகமயமாக்கலே ஒரு முக்கிய காரணமாகிறது.

ஆண்களே வழிநடத்தக் கூடியவர்கள், அவர்கள் சொல்வதைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள்; ஆண்கள் வலிமையானவர்கள், பெண்கள் பலவீனமானவர்கள், பெண்கள் குறைந்த மதிப்புள்ளவர்கள், அவர்கள் ஆண்களின் சொத்து, பாலியல் இன்பத்துக்காகவே பெண்கள் படைக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் முன்னெடுக்கப்படும் சமூகக் கற்பிதம், பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, கொலை என்பவற்றுக்கு வித்திடுகிறது.

எனவே, பாலின அடிப்படையில் குழந்தைகளை வளர்க்காமல் சமத்துவமாக வளர்த்தல், ஆண்கள் என்றால் இப்படித்தான் என்ற வழமையான போக்கை மாற்றல், ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தைகளைச் சகித்துக்கொள்ளாமை, வரையறைகளை வகுத்தல், நல்ல பண்புகளைக் கொண்டாடல் என்பன மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பேசப்படாத மௌனம்

என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது.

“சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன்.

“எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …”

“ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா என்ன நடந்தாலும் எனக்கது தெரியோணும். அம்மாக்கு என்னத்தை எண்டாலும் சொல்லலாமெண்ட துணிவு உனக்கிருக்கோணும்.”

சுமி தலையை ஆட்டினபடி என்னை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“ம்ம், ஓகே, புத்தகம் வாசிப்பமா குட்டி? பிள்ளையின்ரை சின்னக் காலாலை ஓடிப்போய் விருப்பமான ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாடா.”

ரொபேட் மஞ்சின் ‘லுக் அற் மீ’ வாசித்து முடிந்ததும் பழையபடி அவள் கலகலப்பானாள். பிள்ளைகளின் சிறப்பே இதுதான். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருந்துது.

Continue reading

புதர் மண்டியிருந்த மன வீடு

ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின் குளிரூட்டியை வண்ண வண்ண நிறங்களில் அலங்கரித்திருந்தன. கடையில் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க நேர்ந்தபோதல்லாம், காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளிவிட்டது போல ஆளுக்கு ஆள் விலகியோடியதையும், ஏதோ ஒரு கள்ள வேலை செய்கிற மாதிரி அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்துப் பொருள்களைக் கூடையில் போட்டதையும் அவை அவளுக்கு நினைவூட்டின.

“ம்ம், ஆளுக்காள் அவையவைக்குப் பிடிச்ச திரையளோடை அடைஞ்சு கிடக்கிற இந்தச் சந்ததியை அப்பிடியேயிருங்கோ எண்டு இந்தக் கொரோனா இன்னுமெல்லோ ஊக்குவிக்குது. இப்பிடியே போச்செண்டால் மற்ற ஆக்களின்ரை சகவாசம் தேவையில்லாத ஒண்டாய்ப் போயிடும்,” என்ற அவளின் மனஓட்டம் அவளுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

“ரண்டு கிழமைக்கொருக்கா எண்டாலும் வாறவன் இப்ப ரண்டு மாசமாகியும், எட்டியும் பாக்கேல்லையே,” அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“அம்மா, என்னாலை உங்களுக்கு வருத்தம் வந்திஞ்செண்டால் என்னாலை தாங்கேலாதம்மா, எந்த நாளும் வட்ஸ்அப்பிலை கதைக்கிறம்தானே …”

அப்படி அவன் அடிக்கடி சொல்வது அவளுக்கு ஆறுதலுக்குப் பதில் ஆற்றாமையைத்தான் கொடுத்தது.

“தாய்க்கு வருத்தம் வந்திடக் கூடாதெண்டு கராஸுக்குள்ளையே உடுப்பைக் கழட்டிப் போட்டிட்டு, குளிச்சிட்டுத்தான் மஞ்சு டொக்டர் வீட்டுக்குள்ளை போறவவாம்.”

Continue reading

நிழல் ஒன்று

ஜன்னல் கண்ணாடிக்கூடாக வெளியே வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். மேப்பிள் மரத்தில் ஒரு சில அரும்புகள் துளிர்விட்டுக்கொண்டிருந்தன. அங்கும் இங்குமா சில பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. ஆனால் தெரு மட்டும் வெறிச்சோடிப் போயிருந்தது. தேடிப்பிடித்தால் காணக்கூடியளவில் மிகச் சிலர் ஆளுக்கு ஆள் வெகுதொலைவில் முகமூடிகளுடன் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த பூங்காவில் அணில்கள் மட்டும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தன. குளிரோ, வெய்யிலோ எதுவானாலும் ரிம் ஹோட்டன்ஸ் கோப்பி வாங்குவதற்காகக் காத்திருக்கும் கார்களையும் மனிதர்களையும் அவன் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது.

மேசைமேல் ஏற்றப்பட்டிருந்த கதிரைகளும், கலகலத்திருக்கும் அந்தவிடத்தில் இருந்த மயான அமைதியும் அவனுக்குப் பூதாகரமாகத் தெரிந்தன. இந்த அமைதி, இந்த வேலை, கனடாவுக்கு மனைவி சாந்தியின் வரவு … என அவன் வாழ்வுடன் தொடர்பான அனைத்துமே பதிலற்ற கேள்விகளாக மெதுமெதுவாக விசுவரூபமெடுத்துக் கொண்டிருந்தன.

‘கெதியிலை புரோமோசனுக்கு அப்பிளை பண்ணோணும். அப்பத்தான் சாந்தி வரேக்கே சிலவுக்குக் கட்டுபடியாகுமெண்டு நினைச்சுக்கொண்டிருக்க, ம்ம், சத்தமில்லாமல் நான் யுத்தம்செய்வன் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற இந்தக் கொரோனா வந்து நிலைமையை அடியோடு மாத்திப்போட்டுது, சீ…’

Continue reading