இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.

உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள் மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பல தரப்பட்ட அனுகூலங்களை அள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும் சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் வசதியைப் பயன்படுத்தி  ஆசியாவிலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள சில நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால், ஆபிரிக்காவுக்கோ அல்லது அவுஸ்ரேலியாவுக்கோ இதுவரை சென்றிருக்கவில்லை.

பல்வகையுள்ள விலங்குகளை அவற்றின் வாழிடங்களிலேயே பார்த்துக் குதூகலிக்கலாமென்பதற்காக ஒரு தடவை ஆபிரிக்கா போகவேண்டுமென்ற அவா இருந்தாலும், அவுஸ்ரேலியாவுக்குப் போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது. என் உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்கு நெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச் சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும் முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலான மோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம். 

கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின் அறிமுகம் கிடைத்திருந்தது. அவ்வகையில் அறிமுகமாகியிருந்த முருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர் என்ற  முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது. பின்னர் விதி எங்களில் பலரை எங்கெல்லோமே விரட்டியதில், எண்பதுகளின் இறுதிப்பகுதியில் வளர்த்திருந்த அந்த உறவை மீளவும் புதுப்பிக்கும் வாய்ப்பு 2007இலேயே எனக்குக் கிடைத்திருந்தது. ரொறன்ரோவிலிருந்து அவர் புறப்படும்போது, அவுஸ்ரேலியாவில் சந்திப்போம் என நான் கதையோடு கதையாக அன்று கூறியது, 15 வருடங்களின் பின் இவ்வருடம் சாத்தியமாகியிருந்தது.

தங்கையின் மகளின் பட்டமளிப்பில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றதால், அங்கிருந்தே நாட்டின் பெயரும் அது அமைந்திருக்கின்ற கண்டத்தின் பெயரும் ஒன்றாக இருக்கும் சிறப்பைக் கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவுக்குப் பயணமாகியிருந்தேன். Heathrow விமானநிலையத்திலிருந்து நான் இருந்த இடம் தூரத்திலிருந்ததாலும், காலைநேரப் போக்குவரத்து நெருக்கடியைத்  தவிர்ப்பதற்காகவும், அதிகாலை 5½ மணிக்கே நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.

எனது Uber வாகனச் சாரதியாக வந்திருந்த பஞ்சாப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் பயணத்தின்போது பேசிக்கொண்டே வந்தார். தொழில் தேடித் தான் லண்டனுக்கு வந்ததாகவும், தற்போது தன்னுடைய இரண்டு வயது மகளுடன் அதிகநேரத்தைச் செலவிடுவதற்காக அதிகாலையிலும் இரவிலும் மட்டும் Uber  ஓட்டுவதைத் தெரிவுசெய்திருப்பதாகவும் கூறினார். அந்தத் தந்தையின் அன்பும் அர்ப்பணிப்பும் என் மனதைத் தொட்டன. ரொறன்ரோவுக்கு வந்திருந்தபோது, நானும் ஒருவகையில் இதேபோலத்தான் இருந்தேன். பிள்ளைகளை அரைநித்திரையில் daycareஇல் கொண்டுபோய் விட்டுவிட்டு, காலில் சில்லுப்பூட்டியதுபோல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை விரும்பாததால், படிப்புக்கேற்ற ஒரு பயிற்சியைப் பெற்று நிரந்தரமானதொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற என் கனவை மனதில் ஆழமாகவே புதைத்திருந்தேன். அதனால், அந்தக் காலகட்டத்தில் பொருளாதரக் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தபோதும் மனதுக்கு நிம்மதி இருந்தது உண்மைதான்.

முடிவில், விமானநிலையத்துக்கு ஏழு மணிக்கு முன்பே சென்றுவிட்டேன், நான் பதிவுசெய்திருந்த Malaysia Airlines 7:30 மணிக்கே சேவைகளை ஆரம்பிக்கும் என்றிருந்தது. சரி, எல்லாமே எட்டு மணிக்கிடையில் முடிந்துவிடும், பதினொரு மணி விமானத்துக்கான நீண்ட நேரக் காத்திருப்பின்போது மண்டூர் அசோகாவின் எழுதப்படாத கவிதைகளை வாசிக்கலாமென நினைத்துக் கொண்டேன்.

மூன்றாவது நபராக check-in பண்ணச்சென்ற என்னிடம், விசா எங்கே என்று கேட்ட அங்கிருந்த பணிப்பெண்ணுக்கு, நான் ஒரு கனேடியன், எனக்கு விசா தேவையில்லையெனப் பெருமையுடன் பதிலளித்தேன். அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கான அனுமதி கேட்டு கனேடியரும் விண்ணப்பிக்க வேண்டியிருக்குமென நான் நினைக்கவேயில்லை. பயணத்துக்கான அங்கீகாரம் உனக்கும் தேவையெனச் சொன்ன அந்தப் பெண் விண்ணப்பிப்பதற்கான வலைத்தள முகவரியைத் தந்தார். வெட்கமும் பதற்றமும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன.

கவுண்டரிலிருந்து அப்பால் தள்ளிநின்று விண்ணப்பிக்க முயன்றபோதுதான் விசா தேவையற்ற நாடுகளிலிருந்து போவோர் பற்றியும் அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்குத் தெரியவேண்டுமாம் என்பது விளங்கியது. கடவுச்சீட்டைப் படமெடுப்பது, தங்கியிருக்கும் முகவரி கொடுப்பது போன்ற பல வேலைகளை எனது தொலைபேசியின் சின்னத் திரையில் மிகச் சிரமப்பட்டுச் செய்யவேண்டியிருந்தது. முடிவில், அங்கீகாரம் கிடைக்க 24 மணித்தியாலம்வரை எடுக்கலாமெனப் பதில் வந்தது. பீதி என்னைப் பற்றிக்கொண்டது. அந்தச் செய்தியை அந்தப் பெண்ணுடன் பகிர்ந்தபோது, நேரத்துக்கு அது கிடைக்காவிடில் நீ போகமுடியாதென எந்தவித உணர்ச்சியுமில்லாமல் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார் அவர். இப்படி எத்தனைபேரை அவர் சந்தித்திருப்பார். அவருக்கு இது நாளாந்த நிகழ்வு, ஆனால் எனக்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாகப் பிள்ளைகளைத்தான் அழைப்பதுண்டு. ஆனால் ரொறன்ரோவில் அது அதிகாலை மூன்று மணி என்பதால் அதையும் செய்யமுடியவில்லை.  

பின்னர் ஒருவாறாக அங்கீகாரம் கிடைத்து, அந்தக் காத்திருப்பு முடிந்தபோதே என் இதயம் மீண்டும் ஒழுங்காகத் துடிக்கத் தொடங்கியது. அப்பாடா என்ற ஆசுவாசத்துடன் விமானம் ஏறுமிடத்துக்குப் போன எனக்கு இன்னொரு இடி காத்திருந்தது. மூன்று மணித்தியாலம்வரை விமானம் தாமதமாகும் என்றார்கள். கோலாலம்பூரிலிருந்து மெல்பேர்ன் புறப்படும் விமானத்தைத் தவறவிட்டிடுவேனே, என்ன நடக்குமென அந்த விமானப்  பணிப்பெண்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள் அதை நீ அங்கு போய்த்தான் பார்க்கவேண்டுமென்றனர். இதென்னடா எல்லாம் குழப்பமாக இருக்கிறது, 26ம் திகதி வெளிக்கிட்டிருக்கக்கூடாதோ என மனம் சஞ்சலித்தது.

சினேகிதி பாமினி தன் கணவருடன் விமானநிலையம் வந்து என்னை அழைத்துச்செல்வதாக இருந்தது. அது ஒரு கிழமைநாள் என்பதால் அவர்களுக்குச் சிரமம் கொடுக்கக்கூடாதென்பதற்காக இரவு 8:15க்கு அங்கு போய்ச்சேரக்கூடியதாக ரிக்கற் எடுத்திருந்தேன். இனி எப்படி அவர்களைச் சாமத்தில் காத்திருக்கச் சொல்வது எனத் தயக்கமாக இருந்தால், பாமினியை அழைத்து எனக்காகக் காத்திராதீர்கள். நேரத்துடன் வந்தால் நான் அறிவிக்கிறேன் என்றேன். ஒரு பிரச்சினையுமில்லை, ஒன்றுக்கும் யோசிக்காதேயுங்கோ என்று அவ எனக்குச் சமாதானம் சொன்னாலும் எனக்கோ  அமைதியில்லாமல் இருந்தது. அந்த விமானத்துக்குக் காத்திருந்த இன்னொரு மெல்பேர்ன் வாசி, அந்த வசதியை விட்டுவிடாதேயுங்கோ, பிறகு இரவில் கஷ்டப்படுவீர்களென எனக்குப் பாவம் பார்த்தார்.

சிவகாமி எழும்பியதும் என் குறுஞ்செய்திகளைப் பார்த்துவிட்டு, விமானத்துக்கான இணைப்பைத் தவறவிட்டால், மெல்பேர்னுக்கான அடுத்த விமானம் கோலாலம்பூரிலிருந்து 12 மணிநேரத்துக்குப் பின்னரே புறப்படும் என்றபடியால் சாமத்தில் இறங்கி என்ன செய்வதென்ற பிரச்சினை வராது, அப்படி நடந்தால், நான் மலேசியாவைப் பார்க்கலாமென ஆறுதல் சொன்னா. அவுஸ்ரேலியாவுக்கு நான் வருகிறேன் எனச் சொன்னதிலிருந்து அது பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்த பூபதி அண்ணாவும் நிலைமைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பாஸ்போட் கவனம், செல்போனை மறந்துபோய் எங்காவது விட்டுவிடாதேயுங்கோ என்றெல்லாம் அக்கறையாக மீளவும் ஞாபகப்படுத்தினார். ஏதாவது மருந்து எடுக்கிறனீங்கள் எண்டால் அதையும் கொண்டுவாறியள்தானே எனவும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

நல்லவேளையாக அந்த இணைப்பு விமானத்தை கோலாலம்பூரில் ஒரு மணிநேரம் தாமதப்படுத்தி வைத்திருந்ததுடன், வழமையான நடைமுறைகளைத் தவிர்த்து விசேட பாதையால் எங்களைக் கூட்டிச்சென்று அதில் ஏற்றிவிட்டார்கள். ஒருவாறாக 9:30க்குப் போய்ச் சேர்ந்துவிடுவேன் என்பதில் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

விமானம் நிறைந்திருந்தது. நாட்டுக்குள் கொண்டுபோகக்கூடாத பொருள்களைப் பயணிகள் கொண்டுபோகவில்லை என்ற உறுதிமொழியை இப்போதும் காகிதத்தில்தான் அவுஸ்ரேலியா வாங்குகிறது என்பது எனக்கு விசித்திரமானதாக இருந்தது.

இப்படியாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்வதில் பல்வேறு தடங்கல்களை அனுபவித்தாலும், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன் என மகிழுமளவுக்கு அங்கு சென்ற நேரம் முதல் புறப்படும்வரை என் பயணம் இனிதாக அமைந்திருந்தது.

எங்களின் வீட்டிலேயே தாராளமாகத் தங்கலாம் என பாமினி முதலிலேயே மனதார என்னை வரவேற்றிருந்தா. இன்னொருவரின் வீட்டில் இருக்கிறேன் என நான் உணராதளவுக்கு அவ எனக்கு வசதிகளைச் செய்துதந்திருந்தா. பொறியியலாளரான அவரது கணவர் தற்போது ITஇல் வேலைசெய்கிறார். அவரது வருமானமே போதுமானதாக இருக்கிறதென வீட்டில் அமைதியாக இருப்பதைப் பாமினி தெரிவுசெய்திருந்ததால் நான் அங்கிருந்த ஒரு வாரமும் அவவும் என்னுடனேயே இருந்தது எனக்கு மிகவும் செளகரியமாக இருந்தது.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களின்பின் சந்தித்திருந்தாலும், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது எப்படிப் பேசினோமா அப்படியே நாங்கள் மிகவும் இயல்பாகப் பேசிக்கொண்டோம். தினமும் வெவ்வேறு வகையான உணவுகளைச் சமைத்து பாமினி அன்புடன் பரிமாற நான் ஆசைதீர அனுபவித்தேன். பருப்புக் கறிக்குச் சீரகம் மிளகு அரைத்துப் போடுவது அவரின் குடும்பத்தவருக்குப் பிடிக்காது என்பதால் நான் நிற்கும்போதுதான் அப்படிச் சமைத்துச் சுவைக்கமுடிகிறதென அவ சொன்னபோது இடத்துக்கிடம் எப்படிச் சமையல்கள் வேறுபடுகின்றன என்றும் பேசிக்கொண்டோம். சைவஉணவு சாப்பிடும் பாமினி மற்றையோருக்காக அசைவ உணவைக்கூட மிக ருசியாகச் சமைக்கிறார்.

பாமினியின் வீட்டில் வெவ்வேறு வர்ணங்களில் பூத்திருந்த அழகிய பெரிய ரோஜாப் பூக்களையும், மரம் நிறையக் காய்த்திருந்த தோடம்பழங்களையும், சடைத்துப் பெருத்திருந்த கறிவேப்பிலை மரத்தையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. அவுஸ்ரேலியாவின் இதமான காலநிலையை அனுபவித்தபோதும், அங்கிருக்கும் தொழில்வாய்ப்புக்களைப் பற்றி அறிந்தபோதும் அங்கேயே நாங்களும் புலம்பெயர்ந்திருக்கலாமோ, வளவெல்லாம் சோலையாக்கி யாழ்ப்பாணத்தில் இருக்கும் நினைப்புடன் வாழ்ந்திருக்கலாமோ எனக் கொஞ்சம் ஆதங்கமாகவும் இருந்தது.

மெல்பேர்ன் நகரையும் அவர்கள் சுற்றிக்காட்டினார்கள். காரில் போய் காரைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் Yarra ஆற்றையும், வழியெல்லாம் சோலைபோல் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும் நகரின் வெவ்வேறு வகையான கட்டட அமைப்புக்களைப் பார்த்தபோது, மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம் செலுத்தவேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்து செய்யக்கூடியதாக இருந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் இருந்தன. பின்னர் அங்கிருந்த சரவணபவனுக்குச் சாப்பிடப்போனோம். ஆனால் அவர்கள் வட இந்தியர்களைத் திருப்திப்படுத்தும் உணவுகளையே வைத்திருந்தனர். சரவணபவன் எனப் பெயரிடாமல் வேறு பெயரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாமே, நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமென அது எங்களை ஆதங்கப்பட வைத்தது.

மெல்பேர்னுக்குச் சென்ற அன்றே என்னைச் சந்திக்க வந்திருந்த பூபதி அண்ணா ATBC வானொலி ஊடகவியலாரும், எழுத்தாளருமான கானா பிரபா என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச் சென்றிருந்தார். அன்றிரவு கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானா பிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்து வைத்திருந்து மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச் செய்திருந்தார்.

அடுத்த நாள், எனது ஆசிரியர் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், தெல்லிப்பழையில் எங்களின் அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்கு என்னைக் கூட்டிப்போயிருந்தார். அவுஸ்ரேலியாவுக்கு நான் வருகிறேன் என்றதும், “அக்கா உங்களை ஏதாவதொரு இடம் பார்ப்பதற்கு நான் கூட்டிப்போவேன்” என அன்புடன் கூறியிருந்தார். அயல்வீட்டுக்காரராக இருந்தபோதும் என்னைவிட வயதில் மிகவும் சிறியவர் என்பதாலோ என்னவோ ஊரிலிருக்கும்போது அவருடன் பெரிதாகப் பழகியதில்லை. அந்தப் போக்குவரத்தில் கழிந்திருந்த ஏழு மணிநேரத்துக்கு மேலான நேரத்தில் அவரின் காருக்குள் அதுவரை பேசாததெல்லாம் பேசித்தீர்த்தோம். சுயதொழில் செய்பவராக இருந்தும் வருமானத்தைப் பார்க்காமல் எனக்காக ராஜன் செலவழித்த நேரம் அவரின் பெருந்தன்மையைத்தான் காட்டிநின்றது.

விக்ரோறியா மாநிலத்திலுள்ள Port Campbell National Parkஇலுள்ள அந்தச் சுண்ணாம்புக்கல் குன்றுகள் தற்போதும் Twelve Apostles என்றே அழைக்கப்பட்டாலும், தற்போது அவற்றில் எட்டு மட்டுமே கடலரிப்பிலிருந்து தப்பி மீதமாயிருக்கின்றன. மலைகளுக்கும் கடலுக்கும் இடையில் செல்லும் Great Ocean Road எனும் சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற அழகான வீதியின் அருகில் அவை அமைந்துள்ளன. இங்குதான் காதலர் தினம் என்ற படத்தில் வரும் “என்ன விலை அழகே,” என்ற பாடல் படமாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து திரும்பிவரும் வழியில் நள தமயந்தி என்ற திரைப்படத்தில் வரும் சிவா விஷ்னு கோவிலையும் நான் பார்க்கவேண்டுமென என்னை அங்கும் ராஜன் கூட்டிப்போயிருந்தார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இரண்டு மதத் தெய்வங்களும் இணைந்தே இருக்கின்றன.  

அந்த வார இறுதியில், அவுஸ்ரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினரினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த, ‘ஒன்றே வேறே’ என்ற எனது நூலுக்கான அறிமுக நிகழ்வு, இதுவரை நிகழ்ந்த என் நூல் அறிமுகங்களைப் போலன்றி மிகவும் வித்தியாசமான முறையில் நிகழ்ந்திருந்தது. முகமறியாதவர்கள் அதிகமிருந்த அந்த இடத்தினுள்ளே சென்றதும், தன்னை எனக்குத் அறிமுகப்படுத்திக்கொண்ட கலாதேவி பாலசண்முகன் அந்த நூலை நான் எழுதியமைக்கு நன்றி தெரிவித்து, நீண்ட நாட்களின்பின் நல்லதொரு நூலை வாசித்த திருப்தி கிடைத்ததாகச் சொன்னபோது என் உணர்வுகளை வடிக்க என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. அவரின் அன்பும் பரந்தமனமும் என்னை வியக்கச் செய்தன.

நிகழ்ச்சியில் என்னை அறிமுகப்படுத்திய பூபதி அண்ணா என் தந்தையாரைப் பற்றி உயர்வாகக் கூறியமை நெஞ்சைத் தொட்டது. வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கலாதேவியும், பாலசந்தர் செளந்தரபாண்டியனும் சிறப்பாகப் பேசினார்கள். பாமினி என்னுடன் வந்திருந்தமை என் சினேகிதியும் அந்தக் கருத்துரைகளைக் கேட்கிறா என்ற வகையில் இன்னொரு வகையான மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், வழமையில் சபையினருடன் ஒருவராக இருந்து என் நூல் பற்றிய கருத்துரைகளைக் கேட்கும் எனக்கு, பூங்கொத்து, பாராட்டுக் கேடயம் என்றெல்லாம் கிடைத்தபோது கொஞ்சம் அசெளகரியமாக இருந்தது. என்னை மிகவும் சிறப்பாகக் கவனிக்க வேண்டுமென்ற பூபதி அண்ணாவின் அக்கறைதான் இதற்குக் காரணமெனலாம். இருப்பினும் இங்கு நிகழும் அனேகமான புத்தக வெளியீடுகளில் நிகழ்வதுபோல, ஆசியுரை, வாழ்த்துரை என நேர வீணடிப்புக்கள் எதுவும் அங்கிருக்கவில்லை. கருத்துரைத்தவர்களுக்கும் பத்து நிமிடங்களே கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வரிசையாக நின்று என்வலப் கொடுத்துப் புத்தகம் வாங்குவதும் நிகழவில்லை. விருப்பமானவர்கள் மட்டும் ஏற்கனவே விலை போடப்பட்டிருந்த நூல்களை வாங்கிக்கொண்டனர். எனது நூல் மட்டுமன்றி பலரினது நூல்களும் அங்கிருந்தன. அது வாங்கப்படும் புத்தகங்கள் வாசிக்கப்படலாம் என்றொரு சிறிய உத்தரவாதத்தைத் தந்தது. 

பாலசந்தர் பேசியபோது, இலங்கையரின் பேச்சுத் தமிழைக் கேட்பதற்காகத் தான் சிலரின் வீடுகளுக்குப் போவதுண்டெனவும், ஆனால், பேச்சுத் தமிழைவிட எழுத்துத் தமிழ் மிகவும் அற்புதமாக இருக்கிறதெனவும் இலங்கைத் தமிழை மிகவும் கிலாகித்துப் பேசினார். நூலின் சில பகுதிளைத் தான் மீளமீள வாசித்ததாகவும் அவர் கூறியபோது அண்மையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகம் வந்தது.

ரொறன்ரோக் கல்விச் சபையிலுள்ள மாணவர்களின் மொழித் திறனை மதிப்பிடுபவராகவும் நான் வேலைசெய்கிறேன் அப்படியான ஒரு மதிப்பீட்டின்போது, என் இலங்கைத் தமிழைக் கேட்கத் தனக்கு ஆசையாக இருந்ததெனத் தன் அம்மா சொன்னதாகவும், தனக்கும் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்ததெனவும் மாணவி ஒருவர் கூறியிருந்தார். இவ்வகையான நிகழ்வுகள் ஏன்தான் எங்களின் சில எழுத்தாளர்கள் இந்தியத் தமிழில் கதைகளை எழுதுகிறார்களோ என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது. இல்லையா?

பெயரினால் மட்டுமறிந்திருந்த டொக்டர் நொயல் நடேசன், கிறிஸ்டி நல்லரெத்தினம், அக்னிக்குஞ்சு வலைத்தள யாழ் பாஸ்கர், எழுத்தாளர் சகுந்தலா கணநாதன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் அன்று எனக்குக் கிடைத்திருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்தபோது தலைமைவகித்த சகுந்தலா கணநாதனின் கணவர் என்னிடம் வந்து தன் மனைவி பற்றிப் பெருமையாகப் பேசியபோது, முதுமையிலிருக்கும் அந்த அன்பான தம்பதியரைப் பார்க்க எனக்குள் நெகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தநாள் மகாஜனாவில் கற்பித்த தியாகராஜா மாஸ்ரரின் மகனான பொறியியலாளர் ஶ்ரீகந்தராஜா என்னைப் பார்க்க வந்திருந்தார். எழுபதைத் தாண்டிய வயதிலும் கல்லூரி மாணவி ஒருவரைச் சந்தித்து வாழ்த்தவேண்டுமென வந்திருந்த அவரின் அன்பும் பண்பும் என்னை அதிசயிக்கச் செய்தன. தியாகராஜா மாஸ்ரரிடம் நான் படிக்கவில்லை. ஆனால், வெள்ளை வேட்டி, சேட்டுடனும் வரும் அவரின் உருவமும், அதிர்ந்துபேசாத தன்மையும் ஆளுமையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதை அவருக்கும் கூறி மகிழ்ந்தேன்.

மறுநாள் சுற்றுலாப் பயணிகளுக்கென இயங்கும் அமைப்பொன்றுடன், பென்குவின்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். போகும்வழியில் துள்ளித்துள்ளி ஓடும் பல கங்காருகளையும், மரங்களில் தம்மை மறந்து நித்திரையிலிருந்த கொவாலாக்களையும் பார்த்ததுடன், கங்காருக்களுக்கு உணவூட்டக்கூடியதாகவும் இருந்ததில் பெரும்மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன், பென்குவின்கள் வரும்வரை மழைக்குளிருக்குள் கடற்கரையில் காத்திருப்பது எப்படியிருக்குமோ என்ற தயக்கத்துடன் சென்றிருந்த எனக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை அந்தப் பயணம் தந்திருந்தது.

இடைநிலை மாணவர்களுக்காக நான் எழுதிய ‘தமிழ் படிப்போம்’ என்ற நூலில், மாலைநேரத்தில் பிலிப்  தீவுக்கு ஆயிரக்கணக்கான பென்குவின்கள் வரும். அதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமென இணையத்திலிருந்த தகவல்களின்படி அவுஸ்ரேலியாவைப் பற்றியொரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால், அவை அசைந்து அசைந்து வருவதும் திரும்பித் தண்ணீருக்குள் போவதுமாக இருப்பதைப் பார்த்து ஆர்ப்பரித்து, பின்னர் முடிவில் கூட்டம் கூட்டமாக ஆடிஆடி நடந்தபடி அவற்றின் பொந்துகளுக்குப் போவதைப் பார்த்தது விபரிக்கவோ, வார்த்தைகளுக்குள் அடக்கவோ முடியாதளவுக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைத் தந்தது. இந்தக் குட்டிப் பென்குவின்களைப் பார்ப்பதே இத்தனை இன்பமென்றால் Antarcticaக்குப் போனால் எப்படியிருக்குமென நினைத்துப் பார்த்தேன்.

மெல்பேர்னில் நான் கழித்த கடைசி நாளன்று, ராஜனின் அக்கா ­­கெளரி என்னைப் பார்க்க வந்திருந்தா. ஊரிலிருந்தபோது, எங்கள் இருவரினதும் வீடுகளுக்கிடையிலிருந்த வேலியில் வைத்த பொட்டுக்கூடாக நெடுநேரம் நானும் அவவும் பலதையும் கதைப்போம். ஆனால், கடந்த நாற்பது வருடங்களாக அவவைச் சந்திக்கக் கிடைத்ததில்லை. அதனால் இம்முறை மெல்பேர்னுக்குப் போனபோது எப்படியும் கெளரியைச் சந்திக்க வேண்டுமென்பது எனது இலக்காக இருந்தது. அப்படியே அவவைச் சந்தித்ததில் நிறைவாக இருந்தது. மனம்விட்டுக் கதைத்தோம். இனியாவது தொடர்பைப் பேணவேண்டுமென விபரங்களைப் பரிமாறிக்கொண்டோம். (மருத்துவரான கெளரி சமூக ஊடகங்கள்  எதிலுமில்லை என்பது கவலைதான்)

 ரோகிணி ரீச்சர் தன் கடைசிக் காலங்களில்கூட என்னைப் பற்றிக் கதைத்திருக்கிறா எனக் கெளரி சொன்னபோது எனக்குக் கவலையாக இருந்தது. மகாஜனாவும் நானும் என்ற கட்டுரையில், ”வீட்டுக்கு வா கொஞ்சம்கூடக் கணக்குப் படிக்கலாம் என்று தன் வீட்டுக்கு கூப்பிட்ட ரோகிணி ரீச்சர் அம்மாட்டை கையொப்பம் வாங்கிக்கொண்டு வா, சாரணராகச் சேரலாம் என்று பல தடவைகள் பெருமைகொள்ள வைத்த சாரணியத்தை அறிமுகம் செய்துவைக்கின்றா,” என அவவை அன்புடன் நினைவுகூர்ந்திருந்தேன். அப்படியாக என் வாழ்க்கையில் அவ ஒரு முக்கியமான இடத்திலிருந்தா. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களும் இப்படி எத்தனை அன்புள்ளங்களைத் தொலைவில் வைத்திருந்திருக்கிறதென மனம் நொந்தது.

மெல்பேர்ன் விமானநிலையத்தில் பாமினி கொண்டுபோய் விட்டுவிட, சிட்னி விமானநிலையத்துக்கு வந்திருந்த விஜி என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றா. வகுப்புக்களில் மாணவர்களின் உயரத்துக்கேற்பவே இடங்கள்  ஒதுக்கப்படுவது வழமை, அதன்படி அருகருகே இருந்த நாங்கள் மனங்களாலும் நெருங்கியே இருந்திருந்தோம்.

பாமினி வீட்டில் தோடையைப் பார்த்து வியந்த நான் விஜி வீட்டில் செழித்து வளர்ந்திருந்த மாமரத்தையும் வாழைகளையும் பார்த்தும் அதிலேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டேன். அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயராமல் விட்டுவிட்டோமே என மீண்டும் ஆதங்கமாக இருந்தது. 

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந் தோம்புவான் இல்

என்ற குறள் விஜியின் வீட்டுக்குப் பொருத்தமானதாக இருந்தது.

வீட்டின் அறைகள் எங்கும் chocolateகளும் நிறைந்திருந்தன. அவர்களால் அவற்றை எப்படி விட்டுவைக்க முடிகிறதென chocolates பிரியையான எனக்கு  அதிசயமாகவிருந்தது, நான் அங்கிருந்த ஒரு வாரமும் விஜியும் லீவெடுத்திருந்தார். காலையில் எழும்பியதும் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசியானதொரு மசாலா தேநீர் பருகுவதும், பின்னர், விஜி விதம்விதமாகச் சமைத்து வைத்திருக்கும் சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும் அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் போய்ச் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாய்க் கழிந்தது.

முதல்நாள், சோலைபோல எங்குமே பூச்செடிகளால் சூழப்பட்டிருந்த The Grounds of Alexandria என்ற உணவகத்துக்கு விஜியும், நசுக்கிடாமல் நகைச்சுவையுடன் பேசும் அவவின் கணவரும் என்னை அழைத்துச் சென்றிருந்தனர். அந்த இனிமையான சூழலிலிருந்து உணவருந்தியது மனதுக்கு மிகவும் உவப்பாக இருந்தது. அந்த அழகான படங்களை விஜி அவரின் Facebookஇல் பகிர்ந்ததும், நான் சிட்னியில் நிற்கிறேன் என்பதை அறிந்த ஜெயந்தி எங்களைத் தங்களின் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார். ஒரே காலத்தில் மகாஜனாவில் படித்திருந்த ஜெயந்தியைப் பின்னர் கொழும்பில் ஆசிரியர்களுக்கான பட்டறை ஒன்றின்போதே கடைசியாகச் சந்தித்திருந்தேன். தொலைத்த உறவுகளுடன் மீளவும் இணைய வழிசெய்யும் Facebookஇன் தயவால் முப்பது வருடங்களின் பின்னர் நாங்கள் மீண்டும் சந்தித்தோம்.  

பூபதி அண்ணாவின் பாதம் அவருக்குச் சிரமம் கொடுத்துக்கொண்டிருந்த  போதும், சிட்னியிலும் இலக்கிய விழா ஒன்றை ஒழுங்குபண்ணியிருந்தமையால் மெல்பேர்னிலிருந்து அவரும் அங்கு வந்திருந்தார். அப்போது SBS வானொலி  ரேமண்ட் செல்வராஜா என்னை ஒரு பேட்டிகாண்பதற்கான ஒழுங்குகளையும் அவர் செய்திருந்தார். அவுஸ்திரேலிய அரச அங்கீகாரம் பெற்ற வானொலியான அதில் இடம்பெற்ற நேர்காணல் இன்னொருவகையில் வித்தியாசமானதாக இருந்தது. ரேமண்ட் செல்வராஜா என்ன கேட்பார் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதைவிட, பத்து நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட பத்து கேள்விகளுக்கு அவசரமாகப் பதிலளிக்க வேண்டியிருந்தமை ஒருவகையில் சவாலாக அமைந்திருந்தது. அதனால் படித்த பாடசாலையின் பெயரைக்கூடக் குறிப்பிட முடியாதளவுக்குக் கொஞ்சம் குழம்பிவிட்டேன் என்பதில் கவலைதான், அத்துடன் அவுஸ்ரேலியாவுடன் ஒப்பிட்டு கனேடிய தமிழ் இலக்கியச் செயற்பாடுகளைப் பற்றி அவர் கேட்ட கேள்விக்குப் பொதுவாக நான் பதிலளித்துவிட்டேன். அடுத்த நாள் சிட்னி இலக்கிய விழாவுக்குப் போயிருந்தபோதுதான், சிட்னியில் எவ்வளவு சிறப்பாக இலக்கியம் வளர்க்கப்படுகிறது எனப் புரிந்ததில் என் பிழையை நினைத்து வருந்தினேன்.

சிட்னி இலக்கிய விழாவும் சிறப்பாக நிறைவேறியது. அங்கு மொத்தமாக ஐந்து புத்தகங்களுக்கான அறிமுகம் நிகழ்ந்தது. ‘ஒன்றே வேறே’ என்ற எனது நூலுக்கான அறிமுகத்தைச் செய்திருந்த அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளரமுமான செளந்தரி கணேசனிடம் சபையினர் அனைவரையும் தன்பால் கட்டிப்போடும் பேச்சுத் திறன் நிறைந்திருந்தது. அந்த விமர்சனத்தைச் செய்யக்கிடைத்ததில் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியிருந்தாலும் அதனை அவர் அறிமுகம் செய்தது என் அதிஷ்டமென்பேன் நான்.

எழுத்தாளர்களான காவலூர் ராஜதுரை, நீர்வை பொன்னையன் மற்றும் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் போன்றோரின் வழித்தோன்றல்களைப் பூபதி அண்ணா எனக்கு அங்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பெயர் மட்டுமறிந்திருந்த கலாநிதிகள் சந்திரிக்கா சுப்பிரமணியன், கார்த்திகா கணேசர், எழுத்தாளர் விமல் பரம், ஊடகவியலாளர் பாஸ்கரன் ஆகியோரையும் சந்திக்கக் கிடைத்திருந்தது.

 “அக்காவை எழுதவிட்டுவிட்டு நாங்க எல்லா வேலையும் செய்வம், அக்கா இடையில எங்காவது அகன்றால் ஓடிப்போய் எழுதியதை வாசிப்பம், திருத்தவேணும் இப்ப வாசிக்காதே என அக்கா சொல்லுவா,” என எழுத்தாளர் தாமரைச்செல்வியின் தங்கை விமல் கூறியபோது எழுத்தாளர்களின் குடும்பத்தவர்களில் இப்படி எத்தனைபேர் ஆதரவாக இருக்கிறார்கள், தாமரைச்செல்வி எத்துணை அதிஷ்டசாலி எனப் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. பூபதி அண்ணாவின் நூலுக்கான கானா பிரபாவின் விமர்சனத்தை அம்பிகா அசோகபாலன் என்ற மாணவி ஒருவர் அழகாக வாசித்தார். அவரின் தமிழ் உச்சரிப்புத் திறனையும் வாசிப்புத் திறனையும் பார்த்து அதிசயித்தேன். நிகழ்ச்சிக்கு விஜேயின் நண்பர் பொறியியலாளர் கருணாகரனும் வந்து என் நூலைப் பெற்றுக்கொண்டதில் மகிழ்வாக இருந்தது.

பின்னர் அங்கிருந்து விஜியின் குடும்பத்தினரின் விருந்தொன்றுக்காக நீண்ட தூரம் போகவேண்டியிருந்தது. பூபதி அண்ணாவின் வேண்டுகோளின்படி ஐங்கரன் விக்னேஸ்வரா என்னை அங்கு கூட்டிச்சென்றார். நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தபோது, அவரின் தந்தையாரான டொக்டர் விக்னேஸ்வராவிடம் எங்களை வைத்தியத்துக்காக அப்பா அழைத்துச் சென்றிருக்கிறார் என்பது, பூமியின் வடிவம் தட்டையல்ல என்பதை மீளவும் நிரூபித்தது.

அந்த விருந்தில் நான் போய் விஜிக்கு முன்னால் இருந்தபோது எனக்குப் பக்கத்தில் இருப்பது என் சகமாணவி நளினி என்பதை அவர் சிரிக்கும்வரை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவவுடனான உரையாடலின்போது காய்கறிகள் என தாங்கள் எதையும் வாங்குவதில்லை, வளவுக்குள் எல்லாமே இருக்கின்றன என நளினி சொன்னபோது அவுஸ்ரேலியாவில் வாழ்வோரில் சற்றுப் பொறாமையாக இருந்தது.

அடுத்தநாள் தாயகம் வானொலியிலும் தன் சேவைகளைச் செய்யும் பொறியியலாளரான மகாஜனா விக்கி, தன் சக மாணவர்களான பூபாலசிங்கம், அங்கு தமிழ் கற்பிக்கும் தவராணி, மருத்துவரான மகாகவியின் மகள் இனியாள் ஆகியோருடன் மதியவுணவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதுவரையில் அனேகமான புலம்பெயர் நாடுகளில் இருப்பதுபோல் தமிழ்ப் பெயரட்டைகளுடன் அடுக்கடுக்காகத் தமிழ்க் கடைகள் அவுஸ்ரேலியாவில் இல்லையோ என நான் நினைத்தேன். அங்கும் இருக்கின்றன என்பதை அந்த வீதி நிரூபித்தது. வீதி முழுவதும் ஒரே தமிழ் மணமும் தமிழ் ஒலியுமாகத்தானிருந்தது.

இனியாள் போலிருக்கிறாவே என நினைத்த எனக்கு அதுவே இனியாள் என்றதும் சிட்னியில் அவவைக் காண்பேனென எதிர்பாராததால் வியப்பாக இருந்தது. பாடசாலையில் இருக்கும்போது மகாகவியின் மகள் என அவவைத் தெரியுமேயன்றி பழகியதில்லை. பெயருக்கேற்றபடி இனியாள் இனிமையாக, இயல்பாகப் பேசினா. பூபாலசிங்கத்தையும் அவரது மனைவி தவராணியையும் நான் மறந்துவிட்டேன். அதற்காக வயதில்தான் பிழையைப் போடலாம். விக்கியைப் பேராதனையிலும் தெரியும், ஆனால் மகாஜனாவின் நூற்றாண்டுவிழாக் குழுவின் செயலாளராக இருந்தபோதுதான் அவருடன் பழக்கம் வந்தது.

தனியே பயணம்போன நான் மீளவும் கனடாவுக்கு வரும்போதாவது இன்னொருவருடன் சேர்ந்துவரவேண்டுமென்ற விருப்பத்துடன் அபியும் சிட்னிக்கு வந்துசேர்ந்திருந்தா. இரண்டு மாதத்துக்கு முன்புதான் PMHஇல் வேலையைப் பொறுப்பேற்றிருந்தாலும், அம்மாவுக்காக வரவேண்டுமென வந்திருந்த அபியின் பாசத்தைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். (சங்கி பல்கலைக்கழகம் செல்வதாலும், சிவகாமிக்குக் குழந்தை இருப்பதாலும் அவர்களால் வரமுடியவில்லை) விஜிக்கு அபியை மிகவும் நன்றாகப் பிடித்துக்கொண்டது. இன்றுவரைக்கும் ஒரே அபி கதைதான். அவவின் வீடு அபிக்காக எப்போதும் திறந்திருக்குமாமென விஜி அடிக்கடி சொல்லிக்கொல்கிறா.

அபி வந்தன்று கடற்கரைக்குப் போயிருந்தோம். நீலமயமான கடலிலிருந்து கரையை நோக்கி வேகமாகவும் இரைச்சலுடனும் வந்துகொண்டிருந்த அந்தப் பெரும் அலைகளைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அத்துடன் கடற்கரை முழுவதும் அற்புதமான கலைவடிவங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிட்னியிலுள்ள பெயர்பெற்ற இடங்களான Harbour Bridge, Opera House ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தோம். அருகருகே இருக்கும் அந்த இடங்களில்தான் இந்தியன் படத்தில் இடம்பெற்றிருக்கும் “டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா” என்ற பாடல் படமாக்கப்பட்டிருந்தது.

அபி ஒரு தாவரவுண்ணி, விலங்குகளை அடைத்தும் வைத்திருக்கக் கூடாதென நினைக்கிற ஒரு ஆள். அதனால் கங்காரு, பிளாற்றிப்பஸ், கொவாலா போன்ற அவுஸ்திரேலிய விலங்குகளை அவற்றின் வாழிடங்களில் வைத்துப் பார்க்கும் சுற்றுலா ஒன்றுக்கு இங்கிருந்தே முன்பதிவு செய்திருந்தா. அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல அந்திநேரத்தில் சிறிய குழுக்களாகச் சென்று விலங்குகளைப் பார்த்துப் பரவசப்படப் போகிறோமென்ற எதிர்ப்பார்ப்புடன் மிகவும் உற்சாகமாக நாங்கள் அடுத்தநாள் போயிருந்தோம். குறித்த வாகனம் மதியம் ஒரு மணியளவில் வந்து எங்களை ஏற்றிச்சென்றது. பின்னர் மூன்று மணியளவில் உணவகமொன்றின் முன் போய்நின்றது. விரும்பியதை ஓடர் பண்ணிச் சாப்பிடச் சொன்னார், அந்த வாகனச் சாரதி. இரவுச் சாப்பாடு மட்டும்தான் அவர்கள் தருவதாக இருந்ததால் நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தோம். அதனால் எங்களுக்குப் பசிக்கவுமில்லை, உணவில் ஆர்வமிருக்கவுமில்லை. விலங்களைப் பார்ப்பதே எங்களின் கரிசனையாக இருந்தது, எப்போது விலங்குளைப் பார்க்கப்போகிறோமென அவரிடம் நான் கேட்டேன். அடுத்ததாக அங்குதான் போகிறோம் என்றார் அவர்.

அப்படியே போய் முதலாவதாகக் கங்காருக்களைக் காட்டியதும் எங்கள் எல்லோருக்கும் ஒரே ஆர்ப்பரிப்பாக இருந்தது. அவ்வளவுதான். பின்னர் பஸ்ஸை விட்டிறங்கவும் முடியவில்லை, பார்க்கவேண்டுமென நினைத்திருந்த ஏனைய விலங்குகளைப் பார்க்கவும் முடியவில்லை. கங்காருக்களை மட்டும் binoculars ஊடாகப் பார்த்து அவை எங்களுக்குக் கிட்டவிருப்பதுபோல கற்பனை செய்துகொண்டோம்.

காட்டுத்தீ ஏற்பட்ட பின் அங்கு கொவாலாக்கள் வருவதில்லையாம், பிளாற்றிப்பஸ்களைப் பார்த்தும் மூன்று வருடமாயிற்றாம் என்றார் அந்தச் சாரதி. சரி நாங்கள்தான் ஏமாந்தோம் என்றால், இயற்கையை ரசிப்பதற்கும் விலங்குகளை அவற்றின் வாழிடங்களில் பார்ப்பதற்குமென பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்துகொண்டிருக்கும் எங்களுடன் வந்திருந்த மற்ற மூன்று இணையரும்கூட ஏமாந்திருக்கிறார்களே, அவ்வளவுதூரம் மிகச் சிறப்பாக அவர்கள் பகல்கொள்ளையடிக்கின்றனர் என நோகத்தான் எங்களால் முடிந்தது.

வலைப்பக்கத்தை இற்றைப்படுத்தியிருந்தால் நாங்கள் இப்படி ஏமாந்திருக்க மாட்டோமே என எனது விரக்தியை அந்தச் சாரதியிடமும் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டேன். வேறென்னத்தைத்தான் செய்ய? (இப்போதும் அதே கதைதான் அந்த  வலைத்தளத்தில் உள்ளது). “எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலையிருக்கிற சேர்ச்சுக்குப் போனா இதைவிட அதிகமான கங்காருக்களைப் பாக்கலாம்.” என எங்களுடன் வந்திருந்த விஜி சிரித்தார். முடிவில் இரவுச் சாப்பாடும் தந்து இரவு 10:30க்கு இறக்கிவிட்டனர். இப்படியாக ஒரு wildlife tour என்பதற்குப் பதிலாக ஒரு social outing ஆக மட்டும் அது அமைந்திருந்தது.

மறுநாள் மழைக்காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், நீர்வீழ்ச்சிகள் என வெவ்வேறு தரைத்தோற்றங்கள் சங்கமித்திருக்கும் இடத்திலிருக்கும் Blue Mountainsக்குப் போவதற்காக மருத்துவரான விஜியின் மகள் தர்சி வீட்டுக்குப் போனோம். அங்கு சென்றபோதும், விஜியுடனான உரையாடல்களின்போதும் அவவின் மருமகன் என் மருமகன் Steveஐப் பல விடயங்களில் ஒத்திருப்பதைப் பார்த்தேன். நல்லதொரு மகனாக எங்களில் கரிசனை செலுத்தும் மருமகன்மார் கிடைத்ததுக்கு நாங்கள் கொடுத்துவைத்திருக்கிறோம்.

Blue Mountainsக்குப் போகும் பாதை வளைந்து வளைந்து சென்றது. அதனருகே யூகலிப்ரஸ் மரங்கள் நிறைந்திருந்தன. அந்த மரங்களின் இலைகளிலிருந்து வெளியேறும் எண்ணெய் துளிகளிலும், சூழவிருக்கும் நீர்நிலைகளிலிருந்து ஆவியாகும் நீராவியிலும் சூரிய ஒளி பட்டுதெறிக்கும்போது, அந்தக் குன்றுகள் நீலமாகக் காட்சியளிக்கின்றன என்கிறது விஞ்ஞானம். சூரிய ஒளியிலுள்ள ஏழு நிறங்களில் குறுகிய அலைநீளமுள்ள நீல நிறமே அதிகம் சிதறடிக்கப்படுவதால் வானமும் கடலும் நீலமாக இருப்பதைப்போல அவையும் நீலமாகத் தெரிவதால்தான் அவை Blue Mountains என அழைக்கப்படுகின்றன.

அத்துடன் மூன்று மலைக்குன்றுகளும் ஒன்றாக இருப்பதால் அவை Three Sisters என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த மலைகள் பற்றிப் பல தொன்மங்கள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் பொதுவானதாக இருப்பது தன் மூன்று மகள்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மந்திரவாதி ஒருவர் அவர்களை மலையாக்கியிருக்கிறார் என்பதுதான். பின்னர் அவரும் தப்ப வேண்டியிருந்தபோது கிளியாக மாறி தனது மந்திரக்கோலை வாயில் காவிக்கொண்டு அவர் பறந்தபோது, மந்திரக்கோலைத் தவறவிட்டுவிட்டதால் மூன்று சகோதரிகளும் இன்னும் மலையாகவே உள்ளனர் என்கிறது அந்தத் தொன்மங்கள்.

 அவுஸ்ரேலியாவில் நான் பார்த்தவற்றில் எனக்குப் பிடிக்காமலிருந்த விடயங்கள் என இரண்டைச் சொல்லலாம். ஒன்று அங்கு வீட்டுக்குள்ளும் குளிராக இருப்பதால் நன்றாக உடுத்தித்தான் இருக்கவேண்டியிருந்தது. மற்றது கழிவறை அனேகமான வீடுகளில் தனித்திருக்கிறது, எனவே கழுவுவதற்கு குளியலறைக்குச் செல்லவேண்டும். இவை அசெளகரியங்களாக எனக்கிருந்தன.

அவுஸ்ரேலியாவுக்கு ஒரு காலத்தில் கைதிகளைத்தான் அனுப்பினார்களாம் என்பதால் அங்கிருப்பவர்கள் அவர்களின் வாரிசுகளே என அந்த நாட்டைப் பற்றி தாழ்வானதொரு அபிப்பிராயமும் இருக்கிறது. இருப்பினும், மழைக்காடுகள் முதல் பாலைவனம் ஈறாக வேறுபட்டிருக்கும் வெவ்வேறு தரைத்தோற்றங்களையும் காலநிலைகளையும் கொண்ட அந்த நாட்டிலிருக்கும் வசதிகளை அறிந்தால் அது வாழ்வதற்கு ஒரு சிறந்த நாடென்பது தெரியும்.

இன்னொரு நல்லவிடயம், அங்கிருக்கும் தாவரவியல் பூங்காங்களுக்குச் செல்வதற்குக் கட்டணம் ஏதுமில்லை. நிழல்தரும் பெருமரங்களும் அழகான வர்ணப் பூச்செடிகளும்  நிறைந்திருக்கும் அவற்றின் ஊடாக நடப்பது மனதுக்குப் புத்துணர்வு தருமொரு இனிய அனுபவமாக இருந்தது. அத்துடன் மின்சக்தியைச் சேமித்து பூமியின் வளத்துக்கு உதவும்வகையில் dryer இல்லாமல் ஊரில் செய்வதுபோல உடுப்புக்களை அங்கு வெளியில்தான் காயவிடுகிறார்கள்.

சிட்னியில் இருந்த ஒரு வாரமும் சொல்லிக்கொள்ளாமல் வேகமாகக் கழிந்தது. அவுஸ்ரேலியாவில் பார்ப்பதற்கு நிறையவுள்ளன, அடுத்தமுறை நீண்டகால விடுமுறையில் வாருங்கள் என்ற விஜியிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு

பெற்ற தாயும் புலம்பெயர்ந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே’

என்பதற்கேற்ப எங்களுக்கு வாழ்வும் வளமும் தந்திருக்கும் எங்களின் நாடான கனடாவை நோக்கிப் புறப்பட்டோம். 

சங்கியும் வீட்டைவிட்டுப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தபோது, அந்தத் தனிமையை உணராமல் இருப்பதற்காக எழுதியிருக்கும் கதைகளை ஒரு நூலாக்குவோம் என நினைத்ததன் விளைவாக ‘உதிர்தலில்லை இனி’ என்ற நூல் வரவானது. இந்த ஆகஸ்ட்டில் மிகவும் தூரத்திலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவவுக்கு அனுமதி கிடைத்தபோது, இரண்டு கிழமைக்கு ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்த பிள்ளை, இனி இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் வரப்போகிறா என்ற நிதர்சனம் புரிந்தபோது அதன் பாதிப்புத் தெரியக்கூடாது என்ற திட்டமிடலின் விளைவாக ‘ஒன்றே வேறே’ உருவானது.

‘ஒன்றே வேறே’ வெளிவந்த நேரத்தில் அவுஸ்ரேலியாவுக்கும் போகக்கூடியதாக இருந்தது என் அதிஷ்டமே. இளமையில் மணியனின் பயணக்கட்டுரைகளை வாசித்தபோது, நானும் ஒரு நாள் ஒரு பயணக் கட்டுரையை எழுதுவேன் என நினைத்திருக்கவில்லை. வளமிக்கதொரு நாடான அவுஸ்ரேலியாவுக்கான பயணத்துக்கு அத்திவாரமாக இருந்த முருகபூபதி அண்ணாவுக்கும், அந்தப் பயணத்தின் இனிமையான அனுபவங்களை மீட்டுமொரு வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.  

நன்றி : வீரகேசரி வாரவெளியீடு, அக்னிக் குஞ்சு இணையத்தளம்