ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே சிறுகதை தொகுப்பானது கனடா வாழ் புலம்பெயர் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், குடும்ப வன்முறைகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள், இதனால் குழந்தைகளின் மனநிலைகள், பெற்றோர்களிடையான பிள்ளைகள் வளர்ப்புவித வேறுபாடுகள், இளம்பிள்ளைகளினது மனநிலைகள், மற்றும் உளவியல், Eating Disorders பிரச்சனை,மார்பகக்கட்டியை தைரியத்தோடு எதிர்த்து போராடுமவள்,காதல் , பிரிவு , வன்முறைகள்……. இப்படி ஒரு சமூகத்தின் போராட்டங்களை தன் எழுத்தின் சக்தியால் நல்லதோர் படைப்பொன்றை தந்துள்ளார் ஸ்ரீரஞ்சினி.

இதில் சேணமற்ற அவசரம்… என்கின்ற முதலாவது சிறுகதையில் காலநிலை மாற்றத்தோடு உறவுகளின் உணர்வுகள்,பாடுகள்,புரிதல், ஏமாற்றங்கள் என்பன காலநிலையோடு சேர்ந்து வந்து போயின. நிழல் ஒன்று…. என்கின்ற அடுத்து வருகின்ற கதையில் குடும்ப வாழ்வில் அடிமைத்தனமாக நடத்தப்பட்ட பெண்ணொருத்திக்கு நட்புரீதியாக கைகொடுத்து ஆதரித்தது ஓர் ஆண் நட்பு; அந்த நட்பினை அழகாக வெளிப்படுத்தி எழுதியுள்ளார் நூலாசிரியர். புதர் மண்டியிருந்த மன வீடு… என்கிற மற்றுமொரு கதையில் தன் பிள்ளைக்காக தன் விருப்பு வெறுப்புகளை துறந்த தாய் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அவள் மனம் , தான் அடையமுடியா சந்தோசங்களை மற்றவர்கள் அடையும் தருணங்களை எண்ணி அவளின் பரிதவிப்பு; பின் தன்னை தானே சமாதானப்படுத்தும் மனோநிலை . இங்கு கற்பனையோ , மிகைப்படுதலோ எதுவுமே இல்லை. ஒருவிதமான துக்கத்தோட வாசித்தேன்.இவளைப்போல் எத்தனையோ அம்மாக்கள் புதர் மண்டியிருந்த, மண்டியிருக்கின்ற மன வீடோடு…. அடுத்து பேசப்படாத மெளனம் கதையில் பாதுகாப்பாக வழிநடத்த, வளர்க்க வேண்டிய தந்தையாலேயே பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளான மகள் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப்போல் தன் மகள் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதுடன் தன் மகளின் வாழ்நாட்களில் அவள் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் தனக்கு கூறிவிட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். உண்மையில் அவளது எதிர்பார்ப்பு நியாயமானதே. பேசப்படாத மௌனத்தை அந்தத்தாய் இனி ஒருபோதும் ஏற்கமாட்டாள் என்பதே இக்கதையின் சாராம்சம்…

: ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன் : ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன்

சங்கர்… இதில் புலம்பெயர் தேசத்தில் வாழும் பெண்களுக்கான அடக்குமுறைகள்,மற்றும் உடல்உளரீதியான கொடுமைகள் ஆண்களினால் ஏற்படுமிடத்து அந்நாட்டு சட்டங்களின் உதவியுடன் அவள் துணிந்தால் பாதுகாக்கப்படலாம் என்பது பற்றி இக்கதை அமைகிறது.பெண்ணை மரியாதையோடு நடத்தாமல் ,அடிமையாக நடத்தும் பல ஆண்களில் ஒருவனாகவே இக்கதையின் நாயகன் நடந்து கொண்டான் . அதற்கான பதிலை சட்டம் அவனுக்கு புரிய வைத்ததாக கதை முடிகிறது . இனி அடுத்துவரும் கதையில் குடும்பங்களில் ஏற்படுகின்ற சண்டைகள் ,பிரிவுகள் குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதுபற்றி விபரித்து எழுதப்பட்டுள்ளது ; பேசித்தீர்க்க முடியாது பெண்களின் உடலையும் ,மனதையும் பாதிக்கும் வகையில் அடிப்பதும் ,வார்த்தைகளினால் தாக்குவதும் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் அநீதி பற்றியே இக்கதை பேசுகிறது .எதிர்த்து பேசுவதற்கான சுகந்திரம் கூட சில ஆண்களால் கொடுக்கப்படாமலிருப்பது இன்னும் தொடர்கதையே…. குழந்தைகளின் மனநிலையறிந்து நடப்பது பெற்றவர்களின் கடமையென்பதையும் இக்கதையூடாக வலியுறுத்துகிறார் நூலாசிரியர் . ஒன்றே வேறே இதில் மார்பகக்கட்டிகள் புற்றெடுத்த அவள் தைரியத்தோடு அதை எதிர்த்து போராடும் விதம் ; அதே நோயுடைய இன்னொரு பெண்ணினுடைய தைரியமான , நம்பிக்கையான உரையாடல் இவளின் போராட்ட பலத்தை மேலும் உயர்த்தியுள்ளது . நம்பிக்கை மிகு வார்த்தைகளுக்கு இன்னும் பலம் அதிகம் . சமூகவிழிப்புணர்வோடு தன் எழுத்தை இங்கு பலப்படுத்தியுமுள்ளார் . காலநதி தன் விருப்புவெறுப்புகளுக்கு இடமளிக்காது தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த பெற்றவர்கள் அவர்தம் முதிர்ச்சிக் காலத்தில் எந்தவிதமான சுகந்திரமில்லாது பிள்ளைகளின் விருப்பப்படி வாழுதல் என்பது மிகவும் கடினமானதும் , துன்பமானதுமொன்றே . தன் கடந்தகால நினைவுகளை சுமந்துவாழும் தாய்க்கு எல்லாவற்றிலும் தலையீடும் பிள்ளைகளை நீங்கி தனிமையில் இருக்க முனையும் ஓர் தாய் . தனிமை நிம்மதியை மட்டுமே அந்தத்தாய்க்கு இனி கொடுக்கும் . முகிலிருட்டில் Eating Disorders பிரச்சனை பற்றியதாகும். உணவோடு மட்டுமல்லாது தோற்றங்கள் பற்றிய சிந்தனையை மாற்றுகின்ற மனநிலை சம்மந்தமான பிரச்சனை; இப்போதுள்ள பல பிள்ளைகள் சந்திக்கின்ற விடயமே . இளம்வயது பெண்ணொருவர் இதனால் எதிர்கொள்ளும் தாக்கங்கள், மனோநிலை பாதிப்பு , இப்படி அதை எதிர்கொண்டாள் என்பது பற்றி விரிவாக . இதுபற்றி எல்லோரும் அறிந்திருப்பது இன்றைய காலகட்டத்தின் தேவையே . யாருளர் என்றில்லை இங்கு யுத்தகாலத்தில் பெற்றோரை இழந்து தன் அம்மம்மாவோடு வளர்ந்து பின் கனடா வந்து குறுகிய காலத்தில் அங்கேயே பிறந்து வளர்ந்த யுவதியை காதலித்து , பின் ஒன்றாகவே வாழ்ந்து கருத்துவேறுபாடு , இரு வேறுபட்ட கலாச்சாரச்சூழலில் வாழ்ந்தமையால் நிறைய முரண்பாடுகள் , அதனை சரி செய்து கொள்ள முடியாது பிரிவு , பின் கவுன்சிலிக் இப்படியாக அவர்களிருவருக்குமிடையேயான மாறுபட்ட மனநிலைகளை பற்றி விரிவாக . ஒருநாள் இக்கதை பெற்றோர்கள், பிள்ளைகளுக்கிடையான சரியானமுறையில் தொடர்பாடல்கள் இல்லாமையாலும் ,பிள்ளைகளை எப்படி கையாள்வது மற்றும் இந்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அவர்களை கண்டிக்க வேண்டுமாதலால் இங்கு பல பெற்றவர்களுக்கும் , பிள்ளைகளுக்கிடையில் புரிதல்கள் இல்லாமல் , பிணக்குகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது பற்றியும், இருதரப்புக்குமிடையேயான புரிதல்கள் மிக இன்றியமையாதவை என சொல்லப்படுகிறது . பயம் தொலைத்த பயணம் பெற்றவர்களில் விருப்பின்பேரில் வெளிநாடு வந்து கணவனினால் துன்பப்படும் இளம்பெண் பற்றியது . சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகிறாள் .ஒருகட்டத்துக்கு மேல் அவள்தன் உயிர் மீது பயம் உண்டாகிறது .ஆதலால் சரியான சமயத்தில் சரியான முடிவை எடுக்கிறாள். இது உண்மையில் அவளுக்கும் , பிள்ளைகளுக்கும் அவசியமானதொரு முடிவு என்று வாசிக்கும் போதே உணர்தேன் .இதுபோல முடிவுகளை எடுக்க தவறிய பலபெண்கள் சித்திரவதைகளை மட்டுமல்லாது, அடிமைகளாகவும் வாழும் அவலங்கள் தொடர்கதையாக இன்னும்.. நிழலில் நிஜம் தேடி தன் தந்தையை தன் நான்கு வயதில் தொலைத்து விட்டு கனடாவில் வாழ்ந்தவள் தன் பெரியம்மா வீட்டில் யாழ்ப்பாணம் வந்து தங்கிய சில நாட்களில் தன் பெரியம்மாவின் பிள்ளைகளோடு பழகி அவர்களினுடாக ஆத்மா பற்றி பேசி அவர்களின் கருத்துக்களோடு ஒன்றிணைத்தவள் போல தன் அப்பாவின் ஆத்மாவோடு பேசி தன் விருப்புகளை , நடந்தவை பற்றி பேசுகிறாள் . இருவேறுபட்ட சிந்தனையுடைய பிள்ளைகள் பற்றி நிழலில் நிஜம் தேடலில் . இவளும் அவளும் ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரிகள் வெளிநாட்டில் பிறந்த தம் பிள்ளைகளை வளர்க்கும் , அவர்களை நடாத்தும் விதம் பற்றியதாகும். பிள்ளைகளின் விருப்பின் படி அவர்களை வளர்க்கும் ஒரு சகோதரியும், கட்டுப்பாடுகள் , கலாச்சாரமென இன்னொரு சகோதரியும் இரு வேறு கோணங்களில் . பிள்ளைகளின் விரும்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களும் , தம் கலாச்சாரப்படி என வேறு சில பெற்றவர்களும் இங்கு பரவலாக. இவ்விரு சகோதரிகளும் இரு வேறு துருவங்களாக .. மனிதமென்பது கணவன் எதைச் செய்தாலும் அதை ஏற்கின்ற மனைவி , அதை துளியேனும் விரும்பாத பிள்ளைகள் .தன் வேலைச் சுமையை குறைக்க குடிப்பதாக அதில் காரணம் தேடும் அவன் , இவைகளை பொறுத்துக்கொள்ள முடியாது சட்டதின் பிடியில் தகப்பனை நிறுத்தும் பிள்ளைகள் . ஆண், பெண் இருவரும் சமன் என்கின்ற சிந்தனையே இல்லாத இன்னொரு சுரேன் எனும் பாத்திரம் , அதை முற்றிலும் வெறுக்கும் அவன் மனைவி . இப்படி பல்வேறு முரண்களோடு பயணிக்கும் ஒரு குடும்பம் பற்றி நகர்கிறது. பனையோலை இடுக்கில் தற்கொலைக்கு தூண்டப்படும்ஒருவரின் மனநிலையை மாற்றியமைப்பதற்காக உளவியலாளருடனான சந்திப்பு பற்றியும் , உளவள ஆலோசனைகள் , பயிற்சிகள் விரிவான விளக்கங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது . மனித வாழ்வின் பயணத்துக்கு தற்கொலைகள் முடிவல்ல என்பது இக்கதையின் சாராம்சம் .

Read more: ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன்

எல்லாக் கதைகளிலிலும் சமூகத்தின் மீதான ஒரு பற்றுதலும் , அக்கறையும் நூலாசிரியார் கொண்டுள்ளார் என்பது அவர் எழுத்தின் சிறப்பு ..அவர் தொடர்ந்து சிறந்த பல படைப்புகளை தரவேண்டும் என்பதே என் அவா.

நன்றி: https://akkinikkunchu.com/?p=246227