ஏமாற்றங்கள்

“அம்மா, அம்மா,” என பல தடவைகள் மகன் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்மரமாக நின்றாள் கலா. “என்ன, மது கூப்பிடுறது கேட்கேல்லையே? பிறந்த நாளும் அதுமா அவனை அழவிடாமல் போய்ப் பாரன்,” என்று பத்திரிகைக்குள் தலையையும் வாய்க்குள் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு சொன்னான் மனோ.

“நீங்கள் இருந்த இடத்திலை இருந்து கொண்டு சும்மா கதையுங்கோ. நான் விடிய எழும்பின நேரத்திலையிருந்து சமையலோடை அவதிப்படுறது தெரியேல்லையே, ஏன் நீங்கள் போய்ப் பாக்கக் கூடாதே?” பட்டாசு போல் வெடித்தாள் கலா.

கடைசியில் மது எழும்பி அழுது கொண்டு அம்மாவைத் தேடி குசினிக்கு வந்தான். “அம்மா, ஐ கோல்ட் யூ தவுசன் ரைம்ஸ்.”

“மதுக் குட்டி, ஹப்பி பேர்த்டே. நல்ல பிள்ளை மாதிரி ஒரு இடத்திலை இருந்து ரீவியைப் பார் அப்பு. அம்மா பிள்ளையின்ரை பார்ட்டிக்கு சமைக்கிறன்.”

ஆனால் மது விடாமல் அவளின் சட்டையைப் பிடித்து இழுத்த படி சிணுங்கிக் கொண்டு நின்றான்.

“நீங்கள் ஒருக்கா எழும்புங்கோவன், உந்த ரீவியை ஒருக்காப் போட்டிட்டு இவனை உதிலை கொண்டு போய் விடுங்கோ பாப்பம்.”

மனோ அவன் கத்தக் கத்தக் கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய் ரீவிக்கு முன்னாலை இருத்தினான். பிறகு “சத்தம் போடாமல் இருந்தியெண்டால் நீ கேட்ட மாதிரி நான் உனக்கு பவர் றெஞ்சர் ரோய் வாங்கித் தருவன்,” என ஒரு புரோப்போசலை மதுவுக்கு சொன்னான். முடிவில் ரீவியில் பவர் றெஞ்சர்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று துவக்குடன் ஓடிப் போனதைப் பார்த்த திறிலில் ரீவியுடன் ஐக்கியமானான் மது.

Continue reading

ஒன்றே வேறே – சங்கர், இனி என்ற இரு கதைகள் பற்றிய கெளரி பராவின் பார்வை

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி எழுதிய ஒன்றே வேறே என்ற சிறுகதைத்தொகுப்பில் பதினாறு கதைகள் உள்ளன.

புலம் பெயர் கனடா மண்ணில் கால் நூற்றாண்டுக்கு மேலாக வேரூன்றி விருட்சமாக வளர்ந்து நிற்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய வாய்ப்புக்களையும் புதிய வெளியில் எதிர்கொள்ளும் சவால்களையும் எழுதுவதோடு அவர்களின் தீர்வுப்பாதைகளை நிர்ணயிக்கும் உணர்வுகளின் பின்னணியையும் பதினாறு வித்தியாசமான கதைகள் மூலம் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி.

சங்கர் மற்றும் இனி என்று தலைப்பிட்ட இரண்டு சிறுகதைகளை ஒப்பிட்டுப்பார்க்க தோன்றுகிறது.

இந்த இரண்டு கதைகளும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களினதும் ஆண்களினதும் கதை.

சங்கர் என்ற கதை, சங்கர் அவரது மனைவியோடு தனது நண்பர் மகேஸ் வீட்டிற்கு போவதோடு தொடங்குகிறது.

அங்கு அவர் தனது நண்பர்களோடு நள்ளிரவு தாண்டிய பின்னரும் கனடா தினவிழாவை வெகு கோலாகலமாக கொண்டாடுகிறார்.

அன்று அவர் மனைவியின் பிறந்தநாளாகவும் இருக்கிறது. அவர் மனைவி சர்மிளாவிற்கு அந்தக்கொண்டாட்டம் கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. கணவரை உடனே வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார் , ஆனால் சங்கருக்கோ இந்த ஆடல், பாடல் , மது, நண்பர்களின் ஆராவாரம் எதையும் விட்டு விட்டு போக மனம் வரவில்லை.

“”அவள் அவனிடம் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்த மகேசின் மனைவி, “உங்களோடை தனியக் கொண்டாட வேணுமெண்டு அவ விரும்புறா, கூட்டிக்கொண்டு போங்கோவன்” என வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தா.

அவனுக்கு வெட்கமும் எரிச்சலும் அவமானமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. சரி வெளிக்கிடு என அவளுக்குச் சொன்னவனை சந்திரன் வந்து கட்டியணைத்து, மச்சான் என்ஜோய் என்றான். மற்றவர்கள் அனைவரும் ஹப்பி பேர்த்டே சர்மி, என ஒரே நேரத்தில் ஆரவாரமாக திரும்பவும் வாழ்த்தினர்.

“நீங்க நிறையக் குடிச்சிருக்கிறியள், நான் உங்களோடை வரமாட்டன், ஊபரைக் கூப்பிடுங்கோ, அல்லது நான் பஸ்சிலை போறன்” வெளியில் வந்ததும் அவள் அவனிடம் அடம்பிடித்தாள்.

Continue reading

இலண்டன் ஊடாகக் கங்காரு தேசம்

எங்களின் குடும்பப் பெறுமானங்களில் அறத்துக்கு அடுத்ததாக கல்வி மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. பட்டம்பெற்றால்தான் புத்திசாலியா, படிப்பிருந்தால் மட்டும் போதுமா என வைக்கப்படும் தர்க்கங்களில் உண்மை இருந்தாலும்கூட, கல்வித் தகமை எப்போதும் என்னை ஈர்த்திழுப்பதுண்டு. எனவே, இலங்கையிலிருந்து பெறாமகள் ஒருவர் இங்கிலாந்துக்குப் படிக்கப்போகிறார் என்பது எனக்குப் பெரிய விடயமாகத் தெரிந்தது. அதனால், அனுமதி கிடைத்தபோதே, அவவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வேன் என அவவுக்குச் சொல்லியிருந்தேன்.  

பேராதனையில் நிகழ்ந்த என் பட்டமளிப்புக்கு யாழ்ப்பாணத்திலிருந்த என் பெற்றோர் வராததால் எனக்கேற்பட்டிருந்த வருத்தம், இலங்கையிலிருந்து லண்டனுக்கு அவவின் பெற்றோர் போவது சாத்தியமில்லை என்பதால்  நானாவது அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதலை எனக்குத் தந்திருக்கவும்கூடும். எதுவோ அந்தப் பட்டமளிப்பு விழாவுக்காகக் கடந்த ஒக்ரோபரில் லண்டனுக்குப் பயணமாகியிருந்தேன்.

கற்றல் செயல்பாட்டின் அறுவடையைப் பரவசத்துடன் கொண்டாடும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றை ஐரோப்பிய நாடொன்றிலும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் London South Bank University வளாகத்துக்குள் கால்பதித்தேன். பட்டமளிப்பு நிகழவிருந்த அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குப் பல வாசல்கள் இருக்கின்றன என்பது மண்டபத்தின் அளவை எதிர்வுகூறப் போதுமானதாக இருந்தது. என் ரிக்கற்றில் குறிக்கப்பட்டிருந்த வாசலைத் தேடி உள்நுழைந்த என்னை முதலில் ஏமாற்றமே வரவேற்றது. அந்தப் பென்னம்பெரிய மண்டபம் வெறிச்சோடிப் போயிருந்தது. பட்டம் பெறவிருந்த சில மாணவர்கள்கூட நிகழ்வுக்குச் சமூகமளிக்கவில்லை என்றால் பாருங்களேன்.  

பட்டமளிப்பு என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத இப்படியானவர்களைப் பற்றிப் பின்னர் இரண்டு சினேகிதிகளிடம் அலட்டிக்கொண்டபோது, ஐரோப்பாவில் அதுதான் வழமை என்றார் அங்கிருப்பவர், இலங்கையில் மருத்துவப் பட்டம் பெற்ற அவரின் பட்டமளிப்பிலும் அவரின் பெற்றோர் கலந்துகொள்ளவில்லையாம் என்றார் இங்கிருப்பவர். எனக்கு வியப்பாக இருந்தது. பிள்ளை ஒருவர் பட்டம்பெறும்போது ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வேண்டாமா? இருப்பினும், இலங்கையிலிருக்கும் சிலரின் FB பதிவுகளைப் பார்க்கும்போது இப்போது நிலைமை மாறிவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது.

ரொறன்ரோவில் பட்டமளிப்பு விழாவுக்கு வழங்கப்படும்  முக்கியத்துவத்தை எங்களில் பலர் அறிந்திருக்கிறோம். வட அமெரிக்கா முழுவதுமே பல்கலைக்கழகக் கல்வியின் நிறைவு மட்டுமன்றி, ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலைக் கல்விப் பூர்த்திகூட கொண்டாடப்படுகிறது.  பல்கலைக்கழகப் பட்டமளிப்பு நிகழ்வில் ஒருவரின் சார்பில் இருவர் மட்டுமே இங்கு பங்குபற்றலாம், ஆனால் கலந்துகொள்வதற்குப் பணமெதுவும் செலுத்தவேண்டியதில்லை. அங்கோ எத்தனைபேரும் பங்குபற்றலாம், ஆனால் பணம்செலுத்த வேண்டும். அதுதான்,  வித்தியாசத்துக்குக் காரணமோ என்னவோ.

Continue reading

ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன்

ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே சிறுகதை தொகுப்பானது கனடா வாழ் புலம்பெயர் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், குடும்ப வன்முறைகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள், இதனால் குழந்தைகளின் மனநிலைகள், பெற்றோர்களிடையான பிள்ளைகள் வளர்ப்புவித வேறுபாடுகள், இளம்பிள்ளைகளினது மனநிலைகள், மற்றும் உளவியல், Eating Disorders பிரச்சனை,மார்பகக்கட்டியை தைரியத்தோடு எதிர்த்து போராடுமவள்,காதல் , பிரிவு , வன்முறைகள்……. இப்படி ஒரு சமூகத்தின் போராட்டங்களை தன் எழுத்தின் சக்தியால் நல்லதோர் படைப்பொன்றை தந்துள்ளார் ஸ்ரீரஞ்சினி.

இதில் சேணமற்ற அவசரம்… என்கின்ற முதலாவது சிறுகதையில் காலநிலை மாற்றத்தோடு உறவுகளின் உணர்வுகள்,பாடுகள்,புரிதல், ஏமாற்றங்கள் என்பன காலநிலையோடு சேர்ந்து வந்து போயின. நிழல் ஒன்று…. என்கின்ற அடுத்து வருகின்ற கதையில் குடும்ப வாழ்வில் அடிமைத்தனமாக நடத்தப்பட்ட பெண்ணொருத்திக்கு நட்புரீதியாக கைகொடுத்து ஆதரித்தது ஓர் ஆண் நட்பு; அந்த நட்பினை அழகாக வெளிப்படுத்தி எழுதியுள்ளார் நூலாசிரியர். புதர் மண்டியிருந்த மன வீடு… என்கிற மற்றுமொரு கதையில் தன் பிள்ளைக்காக தன் விருப்பு வெறுப்புகளை துறந்த தாய் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அவள் மனம் , தான் அடையமுடியா சந்தோசங்களை மற்றவர்கள் அடையும் தருணங்களை எண்ணி அவளின் பரிதவிப்பு; பின் தன்னை தானே சமாதானப்படுத்தும் மனோநிலை . இங்கு கற்பனையோ , மிகைப்படுதலோ எதுவுமே இல்லை. ஒருவிதமான துக்கத்தோட வாசித்தேன்.இவளைப்போல் எத்தனையோ அம்மாக்கள் புதர் மண்டியிருந்த, மண்டியிருக்கின்ற மன வீடோடு…. அடுத்து பேசப்படாத மெளனம் கதையில் பாதுகாப்பாக வழிநடத்த, வளர்க்க வேண்டிய தந்தையாலேயே பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளான மகள் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப்போல் தன் மகள் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதுடன் தன் மகளின் வாழ்நாட்களில் அவள் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் தனக்கு கூறிவிட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். உண்மையில் அவளது எதிர்பார்ப்பு நியாயமானதே. பேசப்படாத மௌனத்தை அந்தத்தாய் இனி ஒருபோதும் ஏற்கமாட்டாள் என்பதே இக்கதையின் சாராம்சம்…

: ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன் : ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன்

சங்கர்… இதில் புலம்பெயர் தேசத்தில் வாழும் பெண்களுக்கான அடக்குமுறைகள்,மற்றும் உடல்உளரீதியான கொடுமைகள் ஆண்களினால் ஏற்படுமிடத்து அந்நாட்டு சட்டங்களின் உதவியுடன் அவள் துணிந்தால் பாதுகாக்கப்படலாம் என்பது பற்றி இக்கதை அமைகிறது.பெண்ணை மரியாதையோடு நடத்தாமல் ,அடிமையாக நடத்தும் பல ஆண்களில் ஒருவனாகவே இக்கதையின் நாயகன் நடந்து கொண்டான் . அதற்கான பதிலை சட்டம் அவனுக்கு புரிய வைத்ததாக கதை முடிகிறது . இனி அடுத்துவரும் கதையில் குடும்பங்களில் ஏற்படுகின்ற சண்டைகள் ,பிரிவுகள் குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதுபற்றி விபரித்து எழுதப்பட்டுள்ளது ; பேசித்தீர்க்க முடியாது பெண்களின் உடலையும் ,மனதையும் பாதிக்கும் வகையில் அடிப்பதும் ,வார்த்தைகளினால் தாக்குவதும் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் அநீதி பற்றியே இக்கதை பேசுகிறது .எதிர்த்து பேசுவதற்கான சுகந்திரம் கூட சில ஆண்களால் கொடுக்கப்படாமலிருப்பது இன்னும் தொடர்கதையே…. குழந்தைகளின் மனநிலையறிந்து நடப்பது பெற்றவர்களின் கடமையென்பதையும் இக்கதையூடாக வலியுறுத்துகிறார் நூலாசிரியர் . ஒன்றே வேறே இதில் மார்பகக்கட்டிகள் புற்றெடுத்த அவள் தைரியத்தோடு அதை எதிர்த்து போராடும் விதம் ; அதே நோயுடைய இன்னொரு பெண்ணினுடைய தைரியமான , நம்பிக்கையான உரையாடல் இவளின் போராட்ட பலத்தை மேலும் உயர்த்தியுள்ளது . நம்பிக்கை மிகு வார்த்தைகளுக்கு இன்னும் பலம் அதிகம் . சமூகவிழிப்புணர்வோடு தன் எழுத்தை இங்கு பலப்படுத்தியுமுள்ளார் . காலநதி தன் விருப்புவெறுப்புகளுக்கு இடமளிக்காது தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த பெற்றவர்கள் அவர்தம் முதிர்ச்சிக் காலத்தில் எந்தவிதமான சுகந்திரமில்லாது பிள்ளைகளின் விருப்பப்படி வாழுதல் என்பது மிகவும் கடினமானதும் , துன்பமானதுமொன்றே . தன் கடந்தகால நினைவுகளை சுமந்துவாழும் தாய்க்கு எல்லாவற்றிலும் தலையீடும் பிள்ளைகளை நீங்கி தனிமையில் இருக்க முனையும் ஓர் தாய் . தனிமை நிம்மதியை மட்டுமே அந்தத்தாய்க்கு இனி கொடுக்கும் . முகிலிருட்டில் Eating Disorders பிரச்சனை பற்றியதாகும். உணவோடு மட்டுமல்லாது தோற்றங்கள் பற்றிய சிந்தனையை மாற்றுகின்ற மனநிலை சம்மந்தமான பிரச்சனை; இப்போதுள்ள பல பிள்ளைகள் சந்திக்கின்ற விடயமே . இளம்வயது பெண்ணொருவர் இதனால் எதிர்கொள்ளும் தாக்கங்கள், மனோநிலை பாதிப்பு , இப்படி அதை எதிர்கொண்டாள் என்பது பற்றி விரிவாக . இதுபற்றி எல்லோரும் அறிந்திருப்பது இன்றைய காலகட்டத்தின் தேவையே . யாருளர் என்றில்லை இங்கு யுத்தகாலத்தில் பெற்றோரை இழந்து தன் அம்மம்மாவோடு வளர்ந்து பின் கனடா வந்து குறுகிய காலத்தில் அங்கேயே பிறந்து வளர்ந்த யுவதியை காதலித்து , பின் ஒன்றாகவே வாழ்ந்து கருத்துவேறுபாடு , இரு வேறுபட்ட கலாச்சாரச்சூழலில் வாழ்ந்தமையால் நிறைய முரண்பாடுகள் , அதனை சரி செய்து கொள்ள முடியாது பிரிவு , பின் கவுன்சிலிக் இப்படியாக அவர்களிருவருக்குமிடையேயான மாறுபட்ட மனநிலைகளை பற்றி விரிவாக . ஒருநாள் இக்கதை பெற்றோர்கள், பிள்ளைகளுக்கிடையான சரியானமுறையில் தொடர்பாடல்கள் இல்லாமையாலும் ,பிள்ளைகளை எப்படி கையாள்வது மற்றும் இந்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அவர்களை கண்டிக்க வேண்டுமாதலால் இங்கு பல பெற்றவர்களுக்கும் , பிள்ளைகளுக்கிடையில் புரிதல்கள் இல்லாமல் , பிணக்குகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது பற்றியும், இருதரப்புக்குமிடையேயான புரிதல்கள் மிக இன்றியமையாதவை என சொல்லப்படுகிறது . பயம் தொலைத்த பயணம் பெற்றவர்களில் விருப்பின்பேரில் வெளிநாடு வந்து கணவனினால் துன்பப்படும் இளம்பெண் பற்றியது . சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகிறாள் .ஒருகட்டத்துக்கு மேல் அவள்தன் உயிர் மீது பயம் உண்டாகிறது .ஆதலால் சரியான சமயத்தில் சரியான முடிவை எடுக்கிறாள். இது உண்மையில் அவளுக்கும் , பிள்ளைகளுக்கும் அவசியமானதொரு முடிவு என்று வாசிக்கும் போதே உணர்தேன் .இதுபோல முடிவுகளை எடுக்க தவறிய பலபெண்கள் சித்திரவதைகளை மட்டுமல்லாது, அடிமைகளாகவும் வாழும் அவலங்கள் தொடர்கதையாக இன்னும்.. நிழலில் நிஜம் தேடி தன் தந்தையை தன் நான்கு வயதில் தொலைத்து விட்டு கனடாவில் வாழ்ந்தவள் தன் பெரியம்மா வீட்டில் யாழ்ப்பாணம் வந்து தங்கிய சில நாட்களில் தன் பெரியம்மாவின் பிள்ளைகளோடு பழகி அவர்களினுடாக ஆத்மா பற்றி பேசி அவர்களின் கருத்துக்களோடு ஒன்றிணைத்தவள் போல தன் அப்பாவின் ஆத்மாவோடு பேசி தன் விருப்புகளை , நடந்தவை பற்றி பேசுகிறாள் . இருவேறுபட்ட சிந்தனையுடைய பிள்ளைகள் பற்றி நிழலில் நிஜம் தேடலில் . இவளும் அவளும் ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரிகள் வெளிநாட்டில் பிறந்த தம் பிள்ளைகளை வளர்க்கும் , அவர்களை நடாத்தும் விதம் பற்றியதாகும். பிள்ளைகளின் விருப்பின் படி அவர்களை வளர்க்கும் ஒரு சகோதரியும், கட்டுப்பாடுகள் , கலாச்சாரமென இன்னொரு சகோதரியும் இரு வேறு கோணங்களில் . பிள்ளைகளின் விரும்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர்களும் , தம் கலாச்சாரப்படி என வேறு சில பெற்றவர்களும் இங்கு பரவலாக. இவ்விரு சகோதரிகளும் இரு வேறு துருவங்களாக .. மனிதமென்பது கணவன் எதைச் செய்தாலும் அதை ஏற்கின்ற மனைவி , அதை துளியேனும் விரும்பாத பிள்ளைகள் .தன் வேலைச் சுமையை குறைக்க குடிப்பதாக அதில் காரணம் தேடும் அவன் , இவைகளை பொறுத்துக்கொள்ள முடியாது சட்டதின் பிடியில் தகப்பனை நிறுத்தும் பிள்ளைகள் . ஆண், பெண் இருவரும் சமன் என்கின்ற சிந்தனையே இல்லாத இன்னொரு சுரேன் எனும் பாத்திரம் , அதை முற்றிலும் வெறுக்கும் அவன் மனைவி . இப்படி பல்வேறு முரண்களோடு பயணிக்கும் ஒரு குடும்பம் பற்றி நகர்கிறது. பனையோலை இடுக்கில் தற்கொலைக்கு தூண்டப்படும்ஒருவரின் மனநிலையை மாற்றியமைப்பதற்காக உளவியலாளருடனான சந்திப்பு பற்றியும் , உளவள ஆலோசனைகள் , பயிற்சிகள் விரிவான விளக்கங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது . மனித வாழ்வின் பயணத்துக்கு தற்கொலைகள் முடிவல்ல என்பது இக்கதையின் சாராம்சம் .

Read more: ஒன்றே வேறே – வானிலா மகேஸ்வரன் Continue reading

கங்காரு தேசம்

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.

உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள் மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பல தரப்பட்ட அனுகூலங்களை அள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும் சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் வசதியைப் பயன்படுத்தி  ஆசியாவிலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள சில நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால், ஆபிரிக்காவுக்கோ அல்லது அவுஸ்ரேலியாவுக்கோ இதுவரை சென்றிருக்கவில்லை.

பல்வகையுள்ள விலங்குகளை அவற்றின் வாழிடங்களிலேயே பார்த்துக் குதூகலிக்கலாமென்பதற்காக ஒரு தடவை ஆபிரிக்கா போகவேண்டுமென்ற அவா இருந்தாலும், அவுஸ்ரேலியாவுக்குப் போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது. என் உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்கு நெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச் சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும் முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலான மோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம். 

கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின் அறிமுகம் கிடைத்திருந்தது. அவ்வகையில் அறிமுகமாகியிருந்த முருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர் என்ற  முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது. பின்னர் விதி எங்களில் பலரை எங்கெல்லோமே விரட்டியதில், எண்பதுகளின் இறுதிப்பகுதியில் வளர்த்திருந்த அந்த உறவை மீளவும் புதுப்பிக்கும் வாய்ப்பு 2007இலேயே எனக்குக் கிடைத்திருந்தது. ரொறன்ரோவிலிருந்து அவர் புறப்படும்போது, அவுஸ்ரேலியாவில் சந்திப்போம் என நான் கதையோடு கதையாக அன்று கூறியது, 15 வருடங்களின் பின் இவ்வருடம் சாத்தியமாகியிருந்தது.

தங்கையின் மகளின் பட்டமளிப்பில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றதால், அங்கிருந்தே நாட்டின் பெயரும் அது அமைந்திருக்கின்ற கண்டத்தின் பெயரும் ஒன்றாக இருக்கும் சிறப்பைக் கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவுக்குப் பயணமாகியிருந்தேன். Heathrow விமானநிலையத்திலிருந்து நான் இருந்த இடம் தூரத்திலிருந்ததாலும், காலைநேரப் போக்குவரத்து நெருக்கடியைத்  தவிர்ப்பதற்காகவும், அதிகாலை 5½ மணிக்கே நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.

Continue reading

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே

இலங்கையை விட்டு எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடும்படி உள்நாட்டுப் போர் எங்களில் பலரைத் துரத்தியது. அதன் விளைவு, நாங்களும் எங்களின் அயலார், உற்றார், உறவினர்களும் இந்தப் பூமிப் பந்தின் பல்வேறு தேசங்களிலும் சிதறிப்  போனோம்.

அங்ஙனம் விதி விட்டவழி நாங்கள் சிதறி விழுந்த இடங்களில், மொழித் தேர்ச்சி போதாமல், படிப்புக்கேற்ற வேலை கிடையாமல், புதிய சீதோஷ்ண நிலைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற தயார்நிலை இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். எனினும், முடிவில், தஞ்சம் தேடிய புகலிடங்களில் ஆழமாகவே காலூன்றி வாழ எங்களால் முடிந்திருக்கிறது. நாங்கள் பெற்றுக்கொண்ட புகலிடக் குடியுரிமை தொலைத்திருந்த உறவுகளைத் தேடி, அந்தந்த உறவுகள் வாழும் நாடுகளுக்குச் செல்வதற்கும் வழிசெய்திருக்கிறது.

“இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என அன்று கண்ணதாசன் கூறியதுபோல, சொந்த நாட்டையும் உறவுகளையும் பிரிந்த துன்பம் எங்களுக்குள் உழன்று கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இருந்திருந்தால் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்திருக்கக்கூடிய பல விடயங்களை இப்போது எங்களால் சுலபமாகச் செய்யமுடிகிறது. அவ்வகையில் விரும்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதற்கு எங்களின் குடியுரிமை அனுமதிப்பதும் ஒருவகையில் ஒரு கொடுப்பனவுதான். இல்லையா?

முதுமை என்பது ஒரு எச்சரிக்கையாகவும் இருப்பதால், பயணம்செய்ய முடியாமல் போக முன் அந்தக் கொடுப்பனவை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டுமென்ற என்ற எண்ணம், அடுத்ததாக நோர்வேயையும் பார்த்துவிட வேண்டுமென்ற அவாவை எனக்குள் வளர்த்தது. அங்கு சென்றால் நான்கு தசாப்பதங்களுக்கு மேலாகக் காணாமல் இருக்கும் உறவுகளையும் சந்திக்கலாமென்பது, அந்த எண்ணத்துக்கு மேலும் வலுச்சேர்த்தது.

நள்ளிரவிலும் சூரியன் துயிலாத நாடு எனப் பெயர்பெற்ற நோர்வேயைக் கண்குளிரக் காண்பதற்கு ஜுன் மாதம் எல்லாவகையிலும் பொருத்தமானதாக இருக்குமென  முடிவெடுத்தபோது, அது இளைய மகள் சங்கிக்கும் வசதியானதாக இருந்தது. ஆனால், அவவுக்கு இரண்டு கிழமை மட்டுமே லீவு இருந்ததால், போக்குவரத்துக்கான நேரம் போக, நோர்வேயில் மிஞ்சியிருக்கப்போவது ஏழே ஏழு நாள் மட்டும்தான் என்றானபோது, அந்த ஏழு நாள்களுக்குள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதுடன் இடங்களையும் சுற்றிப் பார்ப்பதென்பது இலேசான ஒரு விடயமல்ல என்பது நன்கே புரிந்தது. நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் வாழ்கின்ற Stavanger, Bergen, Oslo ஆகிய மூன்று நகரங்களும் இடம்பெறக்கூடியதாக எங்களின் பயணத்திட்டத்தை அமைப்பதற்காக நிறைய ஆராயவேண்டியிருந்ததால், சங்கிக்குப் பரீட்சை நிகழ்ந்துகொண்டிருந்த நேரத்திலும் அவவை அடிக்கடி குழப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. எனினும், முடிவில் யாவுமே சுமுகமாக நிகழ்ந்து, நோர்வேப் பயணம் மிகவும் மகிழ்ச்சியான, பயனுள்ள ஒரு பயணமாக அமைந்திருந்ததில் மிகவும் திருப்தியே. அதற்காகப் பயணத்தை நன்கு திட்டமிட்டிருந்த சங்கிக்கும், அந்தப் பயணத்தின்போது எங்களை மனதார வரவேற்று உபசரித்த உறவுகளுக்கும்தான் நன்றி கூறவேண்டும்.

Continue reading