எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி எழுதிய ஒன்றே வேறே என்ற சிறுகதைத்தொகுப்பில் பதினாறு கதைகள் உள்ளன.

புலம் பெயர் கனடா மண்ணில் கால் நூற்றாண்டுக்கு மேலாக வேரூன்றி விருட்சமாக வளர்ந்து நிற்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் புதிய வாய்ப்புக்களையும் புதிய வெளியில் எதிர்கொள்ளும் சவால்களையும் எழுதுவதோடு அவர்களின் தீர்வுப்பாதைகளை நிர்ணயிக்கும் உணர்வுகளின் பின்னணியையும் பதினாறு வித்தியாசமான கதைகள் மூலம் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி.

சங்கர் மற்றும் இனி என்று தலைப்பிட்ட இரண்டு சிறுகதைகளை ஒப்பிட்டுப்பார்க்க தோன்றுகிறது.

இந்த இரண்டு கதைகளும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களினதும் ஆண்களினதும் கதை.

சங்கர் என்ற கதை, சங்கர் அவரது மனைவியோடு தனது நண்பர் மகேஸ் வீட்டிற்கு போவதோடு தொடங்குகிறது.

அங்கு அவர் தனது நண்பர்களோடு நள்ளிரவு தாண்டிய பின்னரும் கனடா தினவிழாவை வெகு கோலாகலமாக கொண்டாடுகிறார்.

அன்று அவர் மனைவியின் பிறந்தநாளாகவும் இருக்கிறது. அவர் மனைவி சர்மிளாவிற்கு அந்தக்கொண்டாட்டம் கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. கணவரை உடனே வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார் , ஆனால் சங்கருக்கோ இந்த ஆடல், பாடல் , மது, நண்பர்களின் ஆராவாரம் எதையும் விட்டு விட்டு போக மனம் வரவில்லை.

“”அவள் அவனிடம் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்த மகேசின் மனைவி, “உங்களோடை தனியக் கொண்டாட வேணுமெண்டு அவ விரும்புறா, கூட்டிக்கொண்டு போங்கோவன்” என வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தா.

அவனுக்கு வெட்கமும் எரிச்சலும் அவமானமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. சரி வெளிக்கிடு என அவளுக்குச் சொன்னவனை சந்திரன் வந்து கட்டியணைத்து, மச்சான் என்ஜோய் என்றான். மற்றவர்கள் அனைவரும் ஹப்பி பேர்த்டே சர்மி, என ஒரே நேரத்தில் ஆரவாரமாக திரும்பவும் வாழ்த்தினர்.

“நீங்க நிறையக் குடிச்சிருக்கிறியள், நான் உங்களோடை வரமாட்டன், ஊபரைக் கூப்பிடுங்கோ, அல்லது நான் பஸ்சிலை போறன்” வெளியில் வந்ததும் அவள் அவனிடம் அடம்பிடித்தாள்.

மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்காமல் சங்கர் தானே காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு போகிறார்.

கணவரின் நண்பர்களின் நக்கல் நையாண்டிகள் மற்றும் தன் சொல்க்கேளாமல் கணவர் குடிபோதையில் தானே காரை ஓட்டி வந்தது என்று எல்லாமே அவமானத்தையும் கோவத்தையும் சர்மிளாவிற்கு ஏற்படுத்துகிறது.

வீட்டுக்கு வந்ததும் சர்மிளாவிற்கு அவர் தாயாரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் முகமாக ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

“குடிச்சுச்போட்டுக் கார் ஓடவேண்டாமெண்டு சொன்னதுக்கு தலைமயிரை பிடித்…”

பேர்த்டே என்பதால் ஊரிலிருந்து அவளின் தாய் அவளைக் கூப்பிட்டிருக்கிறா என்பது ஒரு கணத்துக்குள் அவனுக்கு புரிந்தது. வேகமாகக் கீழே போனவன் போனவேகத்தில் போனைத் துண்டித்தான். ஏதோ சொல்வதற்காக வாயெடுத்தவளின் கன்னத்தைப் பொத்தியடித்தான். “

திரும்பவும் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு செய்து தன்னைப்பற்றி நல்ல விதமாக பேச்ச்சொல்லி வற்புறுத்தினார் சங்கர்.

“மாமி, அப்பிடி ஒண்டும் நான் பெரிசாய்க் குடிக்கேல்லை. சும்மா ஆட்களோடை சேந்து கொஞ்சம் எடுத்தனான். இவ என்னடா எண்டா அதைப் பெரிசாப் படம் காட்டுறா. இந்த நேரத்திலை தனிய ஊபரிலை வரப்போறனெண்டு நிண்டா. கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ …” சொன்னவன் அவளிடம் போனைக் கொடுத்தான்.

அவள் ஏதும் கதைக்கவில்லை. வெறுமன அழுதாள். அவளின் உதடும் ஒரு பக்கக் கன்னமும் வீங்கியிருந்தன.

அவன் மேலே போய் படுத்துக்கொண்டான். …அவள் கீழேயே இருந்தாள்.

வீடு ஒரே நிசப்தமாக இருந்தது.

கொந்தளித்துக்கொண்டிருந்த சர்மிளா மனம் வேறொரு வழியை நாடுகிறது.

“”நீங்க வழமைமாரி வேலைக்குப் போங்கோ, ஆனா பிணை நிபந்தனைகளின்படி நடக்கிறது முக்கியம். எந்தவிதத்திலும் உங்கடை மனிசியை நீங்க தொடர்புகொள்ள முயற்சிக்கக்கூடாது. ஆருக்கூடாகவும் ஏதாவது செய்திகூட அனுப்பேலாது. ….

அவ போற இடங்களிலிருந்தும் 500 மீற்றர் விலகியிருக்கோணும். எங்காவது தற்செயலாகக் கண்டிட்டாலும் விலகிப்போயிடோணும். ….எதையாவது மீறினியள் எண்டால் உங்களைத் திரும்பவும் பொலிஸ் கைதுசெய்யலாம்… பிறகு நீங்க தன்னைச் சந்திக்கலாம் அல்லது வீட்டை வரலாமெண்டு அவ எழுத்திலை சொன்னா மட்டும்தான் உங்கட வீட்டுக்கு நீங்க திரும்பிப்போகலாம். அப்பிடித் தாற ஒப்புதலைக்கூட எந்த நேரத்திலும் வாபஸ் பண்ணுற உரிமை …”

“அவ சொல்லி நான் என்ரை வீட்டை போகோணும்! ம், நல்ல கதைதான்!. முதல் வேலையா அவளை டிவோஸ் பண்ணோனும், அவளோடை மனிசன் வாழேலுமே.”

“பொம்பிளையளுக்கு இந்த நாடு குடுக்கிற இடம்தான்.. அதாலை வாற திமிர்தான். என்ன செய்யிறது? டிவோஸ் எடுக்கோணும் எண்டால் எடுக்கலாம், ஆனா அது வேறை கதை. அதுக்கு நீங்க அதற்கான வக்கீலைச் சந்திக்கோணும். இப்ப முதலிலை இந்த வழக்கை முடிக்கப்பாப்பம்.””

பெண்ணாகப்பிறந்த ஒருத்தி வாழ்க்கையில் எல்லாச்சந்தர்ப்ங்களிலும் ஆணின் சொல்லிற்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், வீட்டிலும் வெளியிலும் பெண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும், அளவோடு பேச வேண்டும், பெண்களின் பாதுகாவலர்களாகிய ஆண்கள் எடுக்கிற எந்த முடிவுகளிலும் பெண்கள் அநாவசியமாகத்தலையிடக்கூடாது, ஏனெனில் பெண் புத்தி பின் புத்தி , மேலும் ஆண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் பெண்கள் மௌனமாக சம்மதிப்பார்கள், அப்படி மீறி சம்மதிக்காவிட்டால் ஏன் பெண்கள் ஆண்களின் முடிவுகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதை அவர்களுக்கு ஆண்கள் பல வழிகளில் எடுத்துரைக்கலாம்.

பெண்கள் ஆண்களின் சொல்ப்பேச்சை கேட்காவிட்டால் சமயத்தில் ஒர் ஆண் கோவப்பட்டு உண்ர்ச்சிவசப்பட்டு கையை ஓங்கலாம் ஏனெனில் அடிக்கிற கைதான் அணைக்கும். இவ்வகையாக காலாகாலமாக ஆண்களுக்கு பெண்களை எப்படி வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும் , அப்படி அவர்கள் இருக்கிற இடத்தில் இருக்காவிட்டால் எப்படியெல்லாம் அவர்களை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக போதிக்கப்பட்டிருக்கின்றது, தொடர்ந்தும் வழக்கத்தில் இருக்கிற சமூக கலாச்சார பண்பாட்டு கற்பிதங்கள் இதையே பல சமூகங்களில் வலியுறுத்தி வருகிறது, எழுதாத சட்டமாக நடப்பில் இந்த முறைமையே பெண்களை கையாள மரமான சமூகங்கள் கடைப்பிடித்து வருகின்றன. மரபான சமூகங்களினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணாக இருக்கும் சங்கரும் அவர் மனைவியை கையாள இந்த முறைமையை கையாள்கிறார்.

தனக்கும் கணவருக்கும் இடையில் இருக்கும் மனக்கசப்பையும் விரிசலையும் பற்றி தன் தாயாரோடு பேச விழைந்த சர்மிளாவை சங்கர் தடுத்ததும் சர்மிளா கனடா நாட்டு குடும்ப வன்முறை சட்டத்தை துணைக்கழைக்கிறார். தூக்கத்தில் இருந்த சங்கரை பொலிஸார் கைது செய்கிறார்கள், சிறை போன்றதொரு தடுப்புக்காவலில் வைக்கிறார்கள் பெண்களை எப்படி சமனாக நடத்த வேண்டும் என்று நன்நடத்தை பாடம் எடுக்கிறார்கள், சங்கருக்கு இதெல்லாம் கடும் எரிச்சலைத்தருகிறது.

சங்கரை பிணையில் எடுக்க வந்த சட்டத்தரணி கூட இந்த நாடு பெண்களுக்கு குடுக்கிற இடம் தான் அவர்களை இப்படி கணவர்களை பற்றி அரசதிகாரத்திடம் முறையிட வைக்கிறது என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்.

புலம் பெயர்ந்த முதலாவது தலைமுறைத்தமிழர்களைப்பொறுத்தவரையில் அரசும் அரசதிகாரங்களும் மக்களுக்கு எதிராக ஏவி விடப்படும் ஒர் விடயம் என்றே நினைக்கின்றனர் அவர்கள் வாழ்ந்த நாட்டில் அரச சட்டம் என்பது அவர்கள் அறிவுக்கு எட்டியவரை அப்படித்தான் இருந்தது.

ஆக மொத்தம் இளைமையில் கல்வி சிலையில் எழுத்தென்பார்கள், அது போல சங்கர் போன்ற ஒரு ஆணுக்கு அவர் பிறந்து வளர்ந்ததில் இருந்து பெண்கள் சமூகத்தில் வாழும் இரண்டாம்தரப்பிரஜைகள் என்றே சொல்லிக்கொடுக்கப்பட்டுருக்கிறது, அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாழ்வை வாழாமல் தன்னிச்சையாக சிந்திக்கும் பெண்கள் தண்டனைக்குரியவர்கள் அவர்களுக்குத்தான் நன்நடத்தை வகுப்பை எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்தக்கதையிலும் சங்கர் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றே நினைக்கும் ஒரு நபராக இருக்கின்றார்.

நான் வாழும் நாடான இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் வரிப்பணத்தில் 5.5 பில்லியன்கள் குடும்ப வன்முறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சீர் செய்யும் செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

இப்படி ஒதுக்கப்படும் வரிப்பணம் பல நேரங்களில் வீணடிக்கப்படுகிறது என்று தான் தோன்றுகிறது ஏனெனில் எந்தக்காலத்திலும் சட்டமோ அரச அதிகாரமோ ஒரு ஆண் பெண் உறவில் மூக்கை நுளைத்து அவர்களுக்குள் பரஸ்பரம் அன்பையும் காதலையும் அந்யோன்யத்தையும் வளர்த்து விட முடியாது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இந்த சட்டங்கள் சில சமயங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகின்றன என்பது உண்மை.

புலம் பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய சுற்றம் சூழல் இல்லாமல் தனியாக ஒரு ஆணோடு வாழும் போது அந்த ஆண் பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறத்தலாக இருப்பாரேயானால் அந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

இந்தக்கதைக்கு நேரெதிராக இந்த சிறுகதைத்தொகுப்பில் வந்த இன்னொரு கதையாக இருப்பது “ இனி” என்ற ஒரு சிறுகதை.

அந்தக்கதையில் வரும் கனடாவில் வசிக்கும் ஆண் தன் தாயாரின் சிபாரிசுக்கு இணங்க வன்னியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார்.

“கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. வந்த கடன் அடைத்து, தங்கைச்சிக்கும் திருமணம் செய்துகொடுத்தபின் ஆயாசமாக மூச்செடுத்த காலம் அது.

“முப்பது தாண்டியிட்டுது, வயசானாப்போலை பிள்ளைப் பெத்தால் பிறகு பிள்ளையளோடை ஓடிவிளையாடுறதுக்கு உடலிலை தெம்பிராது தம்பி,” அம்மா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தா.

அந்த வருடக் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது, அவளின் படத்தைக் காட்டி, “இந்தப் பொம்பிளைப் பிள்ளையை எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்குத் தம்பி. வன்னியிலை நடந்த பிரச்சினைக்கே அம்பிட்டு தாய் செத்துப்போச்சாம். பெரிய பாவம்.

பதினாறு வயசிலிருந்தே வீட்டுப் பொறுப்பெல்லாம் அதுதான் பாக்குதாமெண்டு புரோக்கர் சொன்னார். … பிள்ளை நல்ல வடிவெல்லே!” மறுப்புச் சொல்லமுடியாத வகையில் கலியாணத்துக்கு அச்சாரமிட்டா அம்மா.”

இப்படித்தான் இனி என்ற கதையில் வரும் ஆண் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்ததும் ஒரு பிள்ளைக்கு பெற்றோர் ஆகின்றனர்.

வன்னியில் வீட்டுப்பொறுப்பெல்லாம் பார்த்து வளர்ந்த கலாவுக்கு ஒரு குழந்தையை பராமரிப்பதும் கணவனோடு வாழ்க்கை நடத்துவது மட்டுமே வேலையாக இருக்கின்றது.

ஒரு சின்ன வேலையை கலா கணவனிடம் சொல்லும்போதும் அதை ஒரு எஐமானி வேலையாளிடம் வேலையை ஏவுவது போன்றே தோறணையில் ஏவுகிறார். மழையில் நனைந்த குழந்தைக்கு தலையை துவட்டி விட்ட பின் வீட்டில் ஓடிக்கொலோன் இல்லை என்று உணர்ந்ததும் அதை உடனே வாங்கி வரச்சொல்லி ரக்மாட்டிற்கு கணவனை அனுப்புகிறார், அது அங்கு கிடைக்கவில்லை என்றதும் வெறும் கையோடு திரும்பி வந்த கணவனை எதற்கும் கையாலாகாத ஒருத்தர் என்று அவரை வீண் சண்டைக்கு இழுத்தது மட்டுமல்லாது தன்னை அடித்தாக பொய் குற்றம் சாட்டி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கனேடிய காவல்த்துறையின் உதவியை நாடுகிறார். இந்த கதையை வாசிக்க ஆங்கிலப்பழமொழியான making a mountain out of mole hill தான் ஞாபகத்திற்கு வந்தது.

இப்படி ஒன்றுமே இல்லாத ஒரு விடயத்தை பெரிதாக்கி தன் கணவரை வீட்டில் இருந்து விலக்கி வைக்கிறார், அதன் பின் தன் மகனை பார்க்க contact centre களுக்கு வாரம் ஒரு முறை குழந்தைக்கு பிடித்த விளையாட்டு சாமான்களுடன் செல்லும் தகப்பனுப்கு பல நேரம் ஏமாற்றமே எஞ்சுகிறது ஏனெனில் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்து என்பதற்கு இணங்க குழந்தை தூர இருக்கும் அப்பாவுடன் பழைய அன்னியோன்யத்தை மறந்து விட்டிருந்தது.

எனக்கு இந்த கதையை வாசித்த போது Germaine Greer எழுதிய The Female Eunuch ( பாலற்ற பெண்பால்) என்ற புத்தகத்தின் வாசித்த பின்வரும் விடயம் ஒன்று நினைவுக்கு வந்தது.

“ சக்தி

ஒவ்வொரு மனித ஜீவியையும் இயக்குகின்ற ஆற்றலுக்குப்பெயர் சக்தி. அதனைப் பயன்படுத்தி உழைப்பினால் அதனை யாரும் இழப்பதில்லை. அது பேணப்படுகிறது. சக்தி என்பது உளவியல் சார்ந்தது. அதை ஒழுங்குபடுத்துவதாலும், அடக்குவதாலும் அது வக்கிரமான வெளிப்பாடுகளுக்கு இட்டுச்செல்லப்படுகிறது. ஒரு தடையை இது சந்திக்கிறபோது அழிப்பு விசையாக மாறுகிறது. இதன் மூலாதாரத்தை துண்டு துண்டாக்க் குலுக்கி உடைத்து விடுகிறது. பெண்களுக்கு சக்தியின் அழிப்பு வகை அபரிதமாக இருப்பது சராசரி அறிவுள்ள ஆட்களுக்கு தெரியும்.

ஆனால் பெண்களின் இந்த அழிப்புத்தன்மை, இடைவிடாத எரிச்சலின் காரணமாக அவர்களின் படைப்புத்தன்மையை அவர்கள் மீதே திசை திருப்பி விட்டிருப்பதைக்காணலாம்……..இது இவர்களையும் தாண்டி , பிறருடைய,குறிப்பாக தங்களுடைய கணவர்கள் குழந்தைகள் ஆகியோரின் ஆளுமைகளையும் சாதனைகளையும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறது…..//

உலகத்தில் பிறந்த எல்லாப்பெண்களும் திருமணம் செய்து குழந்தை பெற்று இல்லற வாழ்வில் இனிதே கலந்திட முடியும் என்பது மனிதர்கள் பொதுப்புத்தியில் உறைந்த ஒரு விடயம். அது தவறு.

பதினாறு வயதில் இருந்து குடும்ப பொறுப்புக்கள் அத்தனையும் சுமந்த கலாவிற்கு வெறுமனே ஒரு குழந்தையை பார்ப்பது போதாமலிருக்கிறது, ஒரு தாயாக அடக்கப்பட்ட அவளின் ஆற்றல் / சக்தி குறைக்கப்படும் போது அது அவளின் கணவனை பதம் பார்க்கிறது.

இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்று தான் எத்தனை தான் முயன்றாலும் சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.

கடைசியில் கலா தன் கணவனை குடும்ப வன்முறை சட்டம் மூலம் தண்டித்தது தவறு என்று மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த பின்னர் அந்த ஆண் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.

ஆக மொத்தம் வற்புறுத்தலின் பேரில் குழந்தைகளை சேர்ந்து வளர்க்க இரண்டு நபர்கள் காதல் அன்பு மற்றும் அந்நோன்யம் இல்லா உறவில் வாழ நிர்ப்பந்தம் இல்லை என்பது இந்தக்கதைகளின் சாராம்சம்.

நன்றி: திரள் பெப்ரவரி, 2023