“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”

சந்திரபாபு பாடிய ஒரு பழைய தமிழ்ச் சினிமாப்பாடல், இது.

வாழ்க்கையில் ஒருவர் வெற்றியடைவதற்கு அவருடைய புத்திக்கூர்மை மட்டும் போதுமானதல்ல. எமது அனுபவங்கள் மூலம் நாம் அறிந்த ஒரு உண்மை, இது. அதேவேளையில் வெற்றி கிடைப்பதற்கு அதிஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை நம் பக்கம் இருக்க வேண்டும் என்றும் நாம் நம்புகின்றோம். அதனால் தான், பெரும்பாலான நேரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிட்டாத போது, நமக்கு அதிஷ்டம் இல்லை என அதிஷ்டத்தின் மேல் பழியைப் போட்டு விடுகின்றோம்.

குறிப்பிட்ட ஒருவரது வெற்றியின் இரகசியம்தான் என்ன? அவரின் வெற்றிக்கு காரணமாக இருப்பது அவரது திறமையா? இல்லை, அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியா? அல்லது அவரின் மன உறுதிப்பாடா? என நாம் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போமானால், அவரது புத்திக் கூர்மைக்குப் பக்கபலமாக இருக்கும் அவருடைய பல நல்ல இயல்புகள் தான் அந்த வெற்றியின் அடிப்படை என்பதை எம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அத்துடன் ஒருவரின் புத்திக்கூர்மை அவரின் வெற்றிக்கான காரணிகளில் ஒரு சிறிய பகுதியாக மட்டும் தான் இருக்கின்றது என்பதைச் சரித்திரமும் உளவியலும் எமக்குத் தெளிவாகச் சொல்கின்றன.

பென்சுலவேனியா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும் உளவியலாளருமான, Dr. Angela Duckworth, ‘வெற்றி அடைவதற்கு எண்ணங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய சுய கட்டுப்பாடும், நீண்டகால இலட்சியங்களை அடைவதற்கு, விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாகத் தொழிற்படக்கூடிய ஆர்வம் மிகுந்த மனவுறுதியும் ஒருவருக்கு மிகவும் அவசியம்’, என்கிறார். அத்துடன் சலனம், விரக்தி, கவனம் திசை திருப்பப்படல் போன்றவற்றை எதிர்கொள்ளக்கூடிய சூழலுக்கு ஏற்ற நடத்தைகளை விருத்தி செய்யக்கூடிய நனவுநிலை உத்திகளும், வெற்றியை நிர்ணயிக்கின்றன என்பதை அவரது ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

‘மனவுறுதி காணப்படாத பிள்ளைகளில் அதை விருத்தி செய்ய முடியுமா?’ என்ற கேள்விக்கு,  ‘நிச்சயமாக முடியும்’ என்கிறார், Dr. Duckworth.  ‘ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் மனவுறுதி தானாக வந்துவிடும்’ என்று மேலும் குறிப்பிடும் அவர்,  ‘ஆர்வம் தான் வளர்ப்பதற்கு கடிமான ஒரு இயல்பு’ என்கிறார்.

எமது விருப்பத்துக்காக அன்றி வருமானத்துக்காக, அந்தஸ்துக்காக, அல்லது இன்னொருவரைச் சந்தோஷப்படுத்துவது போன்ற வேறு பிழையான காரணங்களுக்காக நாம் எமது பாடங்களை அல்லது தொழிலைத் தெரிந்தெடுப்பதுதான், அவற்றின் மீது எங்களால் ஆர்வம் கொள்ள முடியாமைக்கான காரணமாகின்றது.  எனவே எதுவானாலும் எங்களுக்கு ஆர்வம் இருக்கும் ஒரு விடயத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதனையே பிள்ளை வளர்ப்பிலும் நாம் பின்பற்ற வேண்டும். பிள்ளைகளின் பாதையை நாமே நிர்ணயிக்காமல், அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டலை மட்டும்  வழங்கி, தேர்வினை அவர்களின் கையிலேயே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் மனவுறுதிக்குத் தேவையான முக்கியமான தூண்டலைப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும்.

அடுத்ததாக,  ‘நம்பிக்கையான மனப்பாங்கு இருந்தால் மனவுறுதிக்குத் தேவையான இரண்டாவது காரணியான விடாமுயற்சி இயல்பாகவே வந்துவிடும். எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கை எமக்கு இருந்தால், எம் பாதையில் வரும் பின்னடைவுகள் எங்களின் நோக்கத்துக்குத் தடையாக  இருக்கமாட்டா. எனவே அந்த நம்பிக்கை மனப்பாங்கு, எங்களிடம் இல்லாவிட்டால் எங்களுடன் நாங்கள் கதைக்கும் முறையை மாற்றி அந்த நம்பிக்கையை எம்மிடத்தே உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்’, என்கிறார், Dr. Duckworth. எதிர்மறையாக நாங்கள் எங்களுடன் கதைக்க நேரிட்டால் கூட உடனடியாக அதைத் திருத்திக் கொள்ளவதில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு,  ‘நான் ஒரு முட்டாள்’ என்றோ, ’என்னால் முடியாது’ என்றோ சொல்வதற்குப் பதிலாக  ‘நான் முயற்சி செய்வேன், இந்தத் திறமையை என்னால் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்’ என நேர்மறையாக எமக்குள் நாமே சொல்லிக்கொள்ளப் பழகவேண்டும். நம்பிக்கையான மனப்பாங்கு உள்ளவர்களுடன் பழகுவதும் இவ்வியல்பை வளர்த்துக் கொள்ள உதவும். அவ்வகையில் ஒரு பாதகமான சூழலிலும் கூட சாதகமான அம்சங்களைக் காணப் பிள்ளைகளையும் பழக்கி எடுத்தல் பயன்மிக்கதொரு செயலாகும்.

மேலாக, அர்த்தமுள்ள இலக்குகளும், அவற்றை அடைவதற்கான திட்டமும் மனவைராக்கியத்தை வளர்ப்பதற்குத் தேவையாக உள்ளன. அதற்கு எவை எம்மால் எட்டக்கூடிய இலக்குகள் என்ற தெளிவு எமக்கு அவசியம். அத்துடன் குறித்த இலக்கை படிப்படியாக அடைவதற்கான ஒரு கால நேரத்தை வரையறுப்பதும், அந்த இலட்சியத்தை அடைவது ஏன் முக்கியம் என எழுத்தில் எழுதுவதும், அதைக் கற்பனை செய்து பார்ப்பதும் கூட அந்த இலக்கை நாம் அடையப் பெரிதும் கைகொடுக்கும்.

மின் அஞ்சல், இணையத்தில் வணிகம், கைத்தொலைபேசி மூலமான செய்தி போன்ற நவீனதொழில் நுட்பவசதிகள் உள்ள இந்தக் காலத்தில் நாம் வாழும் வாழ்வு, எந்த ஒரு காரியமும் விரைவாக நடந்தேறுவதை எதிர்பார்க்கவும், அவ்வாறு நிகழாது விட்டால் அதை இலகுவில் கைவிடவும்தான் எங்கள் பிள்ளைகளைப் பழக்கப்படுத்தி விடுகின்றது. அத்துடன் மனிதர்களாகிய நாங்கள், பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்கின்ற உயிரினங்களாக இருக்கின்றோம். அதனால் எதையும் வேகமாகச் செய்யவேண்டிய தேவை ஏற்படும் போது, உடனடிப் பலாபலனை வேண்டி, வழமையான முறைகளையும் (patterns), ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளையும், தெரிந்த குறுக்கு வழிகளையும் பின்பற்றிக் கொள்ளவே மனம் எங்களைத் தூண்டும். எனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாறுபட்ட வகையான பயிற்சிக்கு எம்மையும் எமது பிள்ளைகளையும் நாம் பழக்கப்படுத்த வேண்டிய தேவை அதிகமாக இருக்கின்றது.

மேலும், வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் எமது வாழ்க்கைத் தேவைகளுக்கான தெரிவுகளை பெருமளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. அதனால் எது உண்மையான தேவை என அறிய முடியாமல், சுலபமாக அப் பெருந்தொகையான தெரிவுகளுள் தொலைந்து போவதற்கும் பிள்ளைகளுக்குச் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரே நேரத்தில் பலவிடயங்களில் பிள்ளைகளுக்கு ஆவல் ஏற்படுவது, ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அவர்களின் மனஉறுதியை வளர்ப்பதற்குப் பெருத்த சவாலாக அமைகிறது. அத்துடன் நீண்ட கால இலக்குகளை உருவாக்குவதற்கும், தெரிவுகள் ஏராளமாக இருப்பது ஒரு தடையாக உள்ளது, என்று மேலும் விளக்குகிறார், Dr.Duckworth.

அதே போல், சுயகட்டுப்பாடும் பயிற்சி மூலமே எம்மை வந்தடைகின்றது. அவ்வகையில் Dr. Angela Duckworth ன் ஆய்வினை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள பாடசாலைகள், KIPP (Knowledge Is Power Program) ஊடாக, பேரார்வம், சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, வேட்கை, நம்பிக்கை, மனவுறுதி, சமுதாய நுண்ணறிவு என ஏழு நல்ல பண்புகளை மாணவர்களில் வளர்க்க முயற்சி செய்கின்றன.

  1. பேரார்வம் (வாழ்க்கையை உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் அணுகல்; உயிர்ப்புடன் செயல்படல்)

• தீவிரமாக பங்கேற்றல்

• உற்சாகம் காட்டல்

• மற்றவர்களை உற்சாகப்படுத்தல்

2. சுய கட்டுப்பாடு (உணர்வுகளையும் செயல்பாடுகளையும் கட்டுப்பாடில் வைத்திருத்தல்; தயார்நிலையில் இருத்தலும் பிறருடனான தொடர்பைப் சரிவரப் பேணுதலும்)

சுய கட்டுப்பாட்டுக்கும் வெற்றிக்கும் இடையேயிலான தொடர்பு, புத்திக்கூர்மைக்கும் வெற்றிக்கும் இடையே உள்ள தொடர்பை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகமாக இருப்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

பாடசாலை வேலை

• வகுப்புக்குத் தயாராக வருதல்

• கவனம் செலுத்தல், கவனத் திசை திருப்பல்களைத் தடுக்கக்கூடிய திறனுடன் இருத்தல்

• வழமையான செயல்முறைகளை நினைவு வைத்திருத்தல், அவற்றைச் சரிவரப் பின்பற்றுதல்

• பாடசாலை வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடனடியாகச் செய்தல்

ஒருவருக்கொருவர் இடையேயான தொடர்பு

• விமர்சிக்கப்படும் போது அல்லது தூண்டப்படும் போது கூட அமைதியாக இருத்தல்

• மற்றவர்கள் பேசும்போது குறுக்கீடு செய்யாமல் இருத்தல்

• சக மாணவர்களுடனும் வயதுக்கு வந்தவர்களுடனும் கண்ணியமாக நடத்தல்

• மன நிலையைச் சீராகப் பராமரித்தல்

3. நன்றியுணர்வு ( கிடைக்கும் வாய்ப்புக்கள் பற்றியும் நடக்கும் நல்ல விடயங்கள் பற்றியும் விழிப்பாகவும் நன்றியாகவும் இருத்தல்)

• மற்றவர்களை அங்கீகரித்தலும் பாராட்டலும்

• தனது வாய்ப்புக்களை அங்கீகரித்தலும் மதித்தலும்

4. வேட்கை  (தனது சொந்த நலனுக்கான அனுபவத்தைப் பெறுவதிலும் புதிய விடயங்களைக் கற்பதிலும் ஆவல் காட்டல்; விடயங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக வசீகரிக்கும் உணர்தல்)

• புதிய விஷயங்களை ஆராய்வதில் ஆர்வம்

• ஆழமான விளக்கத்துக்காக கேள்விகள் கேட்டலும் பதில் அளித்தலும்

• செயலூக்கத்துடன் மற்றவர்களுக்கு கவனித்தல்

5. நம்பிக்கை (எதிர்காலத்தில் சிறப்பை எதிர்பார்த்து, அதை அடைவதற்கு உழைத்தல்)

• முடிந்த விரைவில் ஏமாற்றத்தையும் பின்னடைவுகளையும் மேவுதல்

• முயற்சி, எதிர்காலத்தை முன்னேற்றும் என நம்புதல்

6. மனவுறுதி (தொடங்கியதை நிறைவுசெய்தல்; தடைகள் இருந்தாலும் அவற்றை மேவும் இயல்பு; மனஉறுதிப்பாடு மற்றும் தோல்வியிலிருந்து மீளும் திறன் ஆகியவற்றின் ஒரு சேர்க்கை)

• ஆரம்பிக்கும் பணி எதுவாயினும் அதை முடித்தல்

• தோல்வி வந்த பின்பு மேலும் கடுமையாக முயற்சித்தல்

• மனதை ஒருமுகப்படுத்தி மனஉறுதிப்பாட்டுடன் செயல்படல்

7. சமுதாயம்சார் நுண்ணறிவு ( காரணம் கற்பிக்கக் கூடிய விதத்தில் தன்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நோக்கங்கள், உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு)

• மற்றவர்களுடன் முரண்பாடுகள் வரும் போது தீர்வுகளை காணக் கூடிய இயல்பு

• மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை

எமது பிள்ளைகளிலும் இந்த நல்ல இயல்புகளை வளர்க்க முயற்சிப்பதன் மூலம் அவர்களின் வெற்றிக்கு நாம் உதவலாம்.

அத்துடன் பிள்ளை ஒரு விடயத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் போது, ’நீ நல்ல கெட்டிக்காரி ’ எனப் பாராட்டுவதை விடுத்து, அதை செய்துமுடிப்பதற்கு பிள்ளை எடுத்த முயற்சியைப் பாராட்டுதல் மிகுந்த பயனளிக்கும். அப்போது பிள்ளைக்கு மேலும் முயற்சி செய்யலாம் என்ற நம்பிக்கை வருவதுடன், முயற்சி பெறுபேற்றைத் தருகிறது என்ற விளக்கமும் கிடைக்கும். மாறாக, ‘நீ கெட்டிக்காரி’ என்ற பாராட்டு, பிள்ளையினால் இன்னொன்றைச் செய்ய முடியாது போகும் போது,  தன்னால் முடியவில்லையே என்ற மன விரக்தியைத்தான் அந்தப் பிள்ளைக்குக் கொடுக்கும். எனவே எமது தொடர்பாடல் முறையில் நாம் விழிப்பாக இருக்க முயற்சித்தலும் பிள்ளைகளின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தமிழர் தகவல் ஆண்டுமலர் 2013